| ADDED : நவ 26, 2024 07:23 AM
கோவை; கோவை விமான நிலைய ஓடுதளத்தின் நீளத்தை, 800 மீ., அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை சர்வதேச விமானநிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்க ஏதுவாக, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்து விட்டது. இதையடுத்து விமானநிலைய விரிவாக்கப்பணிகளுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக விமான நிலைய ஓடுதளத்தை, 800 மீ., அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப்பணிகள் துவங்கியுள்ளன.விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை துவங்க பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது முக்கியம். அதற்கு அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இயக்கப்பட வேண்டும். அதற்கு விமான ஓடுதளம் நீட்டிப்பு அவசியம். தற்போது விமான ஓடுதளம், 2,990 மீட்டர் நீளம் உள்ளது. இதன் நீளத்தை, 3,800 மீ., அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. விமான நிலைய விரிவாக்கப்பணிகளுடன் இதுவும் நடக்க உள்ளது,'' என்றார்.