உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய் சிகிச்சை வசதிகள் மேம்படுத்த திட்டம்: வரும் 23ம் தேதி அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்

புற்றுநோய் சிகிச்சை வசதிகள் மேம்படுத்த திட்டம்: வரும் 23ம் தேதி அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்

கோவை: தமிழகத்தில், 110.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் மேம்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் கீழ்,முதல் கட்டமாக கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை முட்டை புற்றுநோய்க்கு அதிநவீன நிலையான அறுவை சிகிச்சை முறையை, தமிழக அரசு வரும் 23ம் தேதிஅறிமுகப்படுத்தப்படவுள்ளது. கோவை, சென்னை உட்பட, 17 அரசு மருத்துவமனைகளில் அமைந்துள்ள புற்றுநோய் மையங்கள் இத்திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தில், 2025-26ல் 73.96 கோடி ரூபாய், 2026-27 ல் 19.60 கோடி ரூபாய், 2027-28 ல் 17.40 கோடி ரூபாய் என, மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படவுள்ளது. இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவைசிகிச்சை டாக்டர் செல்வராஜ் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக, மூன்றாண்டு திட்டமாக, 110.96 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். நவீன இயந்திரங்கள் வாயிலாக சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, டாக்டர்களின் திறன் மேம்பாடும் முக்கிய அம்சமாக இத்திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 8 அரசு மருத்துவமனை டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, ைஹதராபாத்தில் இரண்டு வாரம் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டது. தவிர, ஜப்பான் நாட்டின் அனுபவமிக்க புற்றுநோய் நிபுணர் கட்டோ டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை, வேலுாரில் நான்கு நாட்கள் அளித்தார். இப்பயிற்சியில் கற்றுக்கொண்ட நுணுக்கங்களை, கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக தற்போது செயல்படுத்தி வருகிறோம். விரைவில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெப்பப்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சை முறை கோவையில் அறிமுகமாகவுள்ளது. இதன் வாயிலாக, கர்ப்பப்பை வாய் மற்றும்சினை புற்றுநோய் சிகிச்சை மேம்படும். கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை சினை புற்றுநோய் அதிநவீன சிகிச்சை நுணுக்கங்கள் கோவையில் தற்போது, அரசு மருத்துவமனையில் மட்டும் பின்பற்றப்படுகின்றன. இதுவரை, 40 பேருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சிகிச்சை முறை நுணுக்கங்கள் அரசு, தனியார் மருத்துவமனை புற்றுநோய் பிரிவு டாக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான எஸ்.ஓ.பி., (நிலையான அறுவைசிகச்சை முறை)அறிமுக விழா தமிழக அரசு சார்பில், வரும் 23ம் தேதி நடைபெறும். இது தவிர, பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப் படவுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !