இடிக்கப்பட்ட வீடுகளுக்கு சொத்து வரி; சிங்கை ஹவுசிங் யூனிட் குடியிருப்புவாசிகள் குமுறல்
கோவை; சிங்காநல்லுாரில் இடிக்கப்பட்ட, ஹவுசிங் யூனிட் கட்டடங்களுக்கும் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்துமாறு, மாநகராட்சி வருவாய் பிரிவினர் வற்புறுத்துவதாக, குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர்.சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகே, 17.55 ஏக்கரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டன. 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இவ்வீடுகள் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தன.இந்த குடியிருப்பை இடித்து விட்டு, புதிய குடியிருப்பு கட்டித் தருமாறு, பல ஆண்டுகளாக குடியிருப்புவாசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தனியார் கட்டுமானத்துறையினர் பங்களிப்புடன், புதிய அடிக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க, அரசு முன் வந்தது.பழைய வீடுகளை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான வரைவு திட்டத்தை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களிடம், வீட்டு வசதி வாரியம் வழங்கியது. குடியிருப்பு இடிப்பு அனுமதி, குடியிருப்போர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட காரணங்களால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.மாநகராட்சி இடிப்பு ஆணை வழங்கியதையடுத்து, கடந்தாண்டு துவக்கம் முதல் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில், 960 குடியிருப்புகளில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கும் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துமாறு, மாநகராட்சி அலுவலர்கள் வற்புறுத்துவதாக குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர்.சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த மறு கட்டமைப்புக்கான, கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஜெயராம் கூறியதாவது:2011 முதல் வாழ தகுதியற்ற நிலையை, சிங்காநல்லுார் ஹவுசிங் யூனிட் அடைந்தது. தற்போது, 10 பேர் மட்டுமே வாடகைதாரர்களாக உள்ளனர். இடிந்து சிதிலமடைந்த, வாழத்தகுதியற்ற வீடுகளுக்கு, 2023 மார்ச், 31ம் தேதி வரை ஏற்கனவே சொத்து வரியும், குடிநீர் கட்டணமும் செலுத்தப்பட்டு விட்டது.கடந்தாண்டு முதல் இக்குடியிருப்புகளை, இடிக்கும் பணி நடந்துவரும் நிலையில், 80 சதவீத வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன. தற்போது சொத்து வரியும், குடிநீர் கட்டணமும் செலுத்துமாறு, மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர்.வீடுகளின்றி நாங்களே வாடகை கொடுத்து வெளியே தங்கி வருகிறோம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் எப்படி செலுத்த முடியும்? எனவே, 2023 ஏப்., 1 முதல் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை ரத்து செய்து தருமாறு, மாநகராட்சியிடம் முறையிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை அடுத்து, இடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு காலியிட வரி மட்டும் விதிக்க, கிழக்கு மண்டல வருவாய் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.