விவசாயிகள் மீது தவறாக விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கனிமவள திருட்டு விவகாரத்தில், விவசாயிகள் மீது தவறாக விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். 'அரசின் மானியத்தில், பண்ணை குட்டை அமைத்தவர்கள், விவசாயம் செய்வதற்காக மண்ணை சமன் செய்தவர்களுக்கும், கோடிக்கணக்கில் அபராதம் விதித்துள்ளனர். எனவே, மீண்டும் கள ஆய்வு செய்து உண்மையாக மண் எடுத்தவர்கள் மீது, மட்டும் அபராதம் விதிக்க வேண்டும். மண் எடுக்காத விவசாயிகள் மீது, விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர். இதில், எம்.எல்.ஏ., தாமோதரன், பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு, தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் நேரில் வந்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.