நாளை முதல் 27 வரை பி.எஸ்.ஜி., கூடைப்பந்து
கோவை; பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 59வது கூடைப்பந்து போட்டி நாளை துவங்கி 27 வரை நடக்கிறது. பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: பி.எஸ்.ஜி இன்ஜி. கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும். இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு, தமிழக கூடைப்பந்து கழக குறியீட்டு எண் உடன் நடக்கிறது. அகில இந்திய அளவில் சிறந்த எட்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு பிரிவுகளாக போட்டிகள் நடக்க உள்ளன. முதல் மூன்று நாட்கள் சுழற்சி முறையிலும், தொடர்ந்து முதல் இரு இடங்களைபெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். 'ஏ' பிரிவில், சென்னை இந்தியன் வங்கி, பெங்களூரு, பாங்க் ஆப் பரோடா, டில்லி, இந்திய விமானப்படை, கோவை ராஜலட்சுமி எச்.எஸ்.ஏ அணிகள், 'பி' பிரிவில் டில்லி, இந்திய ராணுவம், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, லோனாவாலா, இந்திய கப்பற்படை, கேரளா மாநில மின்வாரியம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. முதல் பரிசாக, ரூ.1 லட்சம், பி.எஸ்.ஜி., சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக, ரூ.75 ஆயிரம், கோப்பை வழங்கப்படும். அரையிறுதிப் போட்டியில் மூன்று, நான்காம்இடம் பிடிக்கும் அணிகளுக்கு, முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், சிறந்த வீரருக்கு, ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தினமும் பிற்பகல், 5:30 மணிக்கு போட்டிகள் துவங்கும். அனுமதி இலவசம். பி.எஸ்.ஜி., புற்றுநோய் மைய இயக்குனர் டாக்டர் பாலாஜி துவக்கி வைக்கிறார். கோவை கலெக்டர் பவன்குமார் பரிசு வழங்குகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.