கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால் முதலிடம் வென்றது பி.எஸ்.ஜி. அணி
கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட 'பி' மண்டலம் கல்லுாரிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி, ஆர்.வி.எஸ். கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அணியும், ஆர்.வி.எஸ். கல்லுாரி அணியும் மோதின. 2-0 என்ற செட் கணக்கில், பி.எஸ்.ஜி. அணி வெற்றி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில், கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர். கல்லுாரி அணியை வென்றது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணியும், ஆர்.வி.எஸ். அணியும் மோதின. இதில், 2-1 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் அணி வெற்றி பெற்றது. சிறந்த வீரர்களாக, கே.பி.ஆர். கல்லுாரி அணி வீரர் துர்கா பிரசாத், பி.எஸ்.ஜி. அணி வீரர் கருணகுமார், இந்துஸ்தான் அணி வீரர் பாவனன், ஆர்.வி.எஸ். அணி வீரர் கோகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் அண்ணாதுரை, பேராசிரியர் லோகேஷ்வரன் ஆகியோர் பரிசு வழங்கினர். ஆர்.வி.எஸ். கல்லுாரி முதல்வர் சிவக்குமார், உடற்கல்வித்துறை இயக்குனர் சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.