பாலம் பணி துவங்காததால் பொதுமக்கள் அதிருப்தி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, தரை மட்ட பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இரு மாதங்களாகியும் பணிகள் துவங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோவில் வீதியில் வசிக்கும் மக்கள், ராஜாமில் ரோடுக்கு செல்லும் வழித்தடத்தில், சாக்கடை தரை மட்ட பாலம் இருந்தது. பராமரிப்பு இல்லாத பாலத்தை அகற்றி, புதிய தரை மட்ட பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. அதன்பின் பணிகள் துவங்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: ராஜா மில் ரோடு பகுதியையொட்டி வசிக்கும் குடியிருப்பு பகுதி மக்கள், எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக கோவில்கள், கடைவீதிக்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். இங்கு இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இரு மாதங்களாகியும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இவ்வழியாக செல்ல முடியாததால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், குழியையொட்டி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.