ஒற்றை யானையால் ஓயாத தொல்லை பொதுமக்கள் பீதி
பெ.நா.பாளையம், ; கோவை வடக்கு பகுதியில் வேளாண் நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவையம்பாளையத்தில் நள்ளிரவு ஓட்டை பிரித்து, யானை தன்னுடைய தும்பிக்கையை உள்ளே விட்டு, வீட்டுக்குள் இருந்த வாழைப்பழத்தை எடுத்து தின்றது. வீட்டு உரிமையாளர் யானை உண்பதை பார்த்து, 'சாப்பிடு.. சாப்பிடு... சாப்பிட்டுட்டு போ'... என்று யானையைப் பார்த்து கூறிய சொற்கள் வைரலாகி வருகின்றன.இந்த ஒற்றை யானை தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலையோர கிராமங்களில் பல்வேறு இடங்களில் வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சின்னதடாகம் பகுதியில் தடாகம் மடத்துார் புதுாரை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன்,58. உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை அழைத்துக்கொண்டு கோவை சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் மடததுார் அருகே வந்து கொண்டிருந்தார். வழியில் மூன்று யானைகள் நிற்பதை பார்த்து இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் போட்டு விட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மனைவியுடன் வீடு திரும்பினார். துடியலுார் அருகே பன்னிமடை வரப்பாளையம் ஸ்ரீராம் கணேசன் தோட்டத்தில் இருந்த ஷெட்டை கீழே தள்ளி சேதப்படுத்தியது.இதேபோல தோட்டங்களில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற இயற்கை மாட்டு தீவனங்களை காட்டு யானைகள் வந்து உண்டு விட்டு, சென்று விடுகின்றன. பாப்பநாயக்கன்பாளையத்தில் தோட்ட கேட்டை திறந்து அங்கிருந்த வேளாண் பயிர்களை சேதப்படுத்தியது. இதே போல தடாகம், பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், பூச்சியூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இப்பிரச்னைக்கு தொழில் நுட்ப ரீதியிலான நிரந்தர தீர்வு காண வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.