தள்ளு மாடல் மொபைல் கிளினிக் வாகனம்; மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் வீணாகிறது
- நமது நிருபர் -தொடர் இயக்கமும் இல்லாமல், பராமரிப்பும் இல்லாமல், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மொபைல் கிளினிக் வாகனம் வீணாகிவருகிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்குவது, பேட்டரி வீல் சேர், சக்கர நாற்காலி, மொபைல், காதொலி கருவி உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவி உபகரணங்களை பெற்றுத்தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடம் தேடிச்சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பயன்பாட்டுக்கான மொபைல் கிளினிக் வாகனம் உள்ளது.இந்த வாகனத்தை சரிவர பயன்படுத்துவதே இல்லை. பெரும்பாலான நாட்கள், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே, ஓரங்கட்டப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.தொடர் இயக்கம், முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த வாகனத்தில் பேட்டரி செயலிழந்துவிட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், சில நேரங்களில் இந்த வாகனத்தை எடுத்து, சோதனை ஓட்டம் போல், கலெக்டர் அலுவலகத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு நிறுத்திவிடுகின்றனர்.'செல்ப் ஸ்டார்ட்' ஆகாத நிலையில், ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று பேர் சேர்ந்து தள்ளியே இந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்கின்றனர்.இதனால், வாகனம் வீணாவதோடு, இருப்பிடம் தேடிச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படாமல், நோக்கமும் நிறைவேறாமல் போகிறது.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளியாகிப்போன இந்த வாகனத்தை பழுது நீக்கி சரி செய்யவேண்டும்; முழு வீச்சில் இயக்கி, இருப்பிடம் தேடிச் சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை.