உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை வளர்ச்சிக்கேற்ப ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தணும்! தொழில் அமைப்பினர், பயணிகள் சங்கத்தினர் ஒருமித்த குரல்

 கோவை வளர்ச்சிக்கேற்ப ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தணும்! தொழில் அமைப்பினர், பயணிகள் சங்கத்தினர் ஒருமித்த குரல்

கோவை: கோவை கிளை இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை நெக்ஸ்ட் ரயில்வே பணிக்குழு சார்பில், மாவட்டத்தில் உள்ள ரயில்வே பயணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சேம்பர் டவர்ஸில் நடந்தது. கோவை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் துரைராஜ் வரவேற்றார். 'கொங்கு குளோபல் போரம்' துணை தலைவர் வனிதா மோகன் பேசியதாவது: நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் கோவையும் ஒன்று. கோவையின் வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்வே உள்கட்டமைப்பும் வளர வேண்டும். மேட்டுப்பாளையம் ரயில் பாதையை இரட்டை பாதையாக்குவது முதல் 24 பெட்டிகள் கொண்ட ரயில்களை கையாளக்கூடிய நடைமேடைகள் அமைப்பது வரை முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடுத்த பத்தாண்டு வளர்ச்சிக்கான குறைந்தபட்ச தேவையாகும். இக்கோரிக்கைகளை ரயில்வே அமைச்சகத்துடன் காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் வகையில் டில்லியில் ஒரு அமைப்பு தேவை. தெற்கு ரயில்வே பொது மேலாளர், ரயில்வே கோட்ட மேலாளருடன் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் கோரிக்கைகளை செயல்படுத்திய திட்டங்களாக மாற்றுவதே நமது இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு, பேசினார். சேம்பர் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், ''கோவையில் சுற்றுவட்ட ரயில் சேவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு ஆராய வேண்டும். பொது போக்குவரத்தை வலுப்படுத்த நஞ்சுண்டாபுரத்தில் விடுபட்டுள்ள ரயில் இணைப்பு பாதையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். கோரிக்கைகளை வகைப்படுத்தி, ரயில்வே அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மண்டல ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாலசுப்ரமணியன், கோட்ட ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர் அண்ணாமலை, ரயில்வே போராட்ட குழு ரவீந்திரன், ரவிசாமி, கோவை சந்திப்பு ரயில் நிலைய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் வாசுதேவ் பகத், அர்ஜுன் வித்யாபிரகாஷ், பிரகாஷ் பாலகிருஷ்ணன், கோவை நெக்ஸ்ட் அமைப்பு சதீஷ், மாவட்டத்தின் பல்வேறு பயணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கோவை கிளை இந்திய தொழில் வர்த்தக சபை துணை தலைவர் நடராஜ் நன்றி கூறினார். பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்திய கோரிக்கைகள்: வடகோவை, மேட்டுப்பாளையம் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், யார்டு மறுசீரமைப்பு முடிந்ததும் ஏற்கனவே அறிவித்த 6 சேவைகளை மேட்டுப்பாளையத்தில் இருந்து துவக்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை, துடியலுாரில் நடைமேடை நீட்டிக்க வேண்டும். வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படும் சரக்கு முனையத்தை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். கூடுதலாக நடைமேடை உருவாக்க வேண்டும். கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க வேண்டும். திருவனந்தபுரம் மற்றும் மங்களூருக்கு புதிதாக வந்தே பாரத் சேவை துவக்க வேண்டும். பழநி வழியாக ராமேஸ்வரம், திண்டுக்கல் நோக்கி ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். போத்தனுார் ரயில் நிலைய மேம்பாட்டு பணியை வேகப்படுத்த வேண்டும். கிணத்துக்கடவு - பொள்ளாச்சி வழித்தடத்தை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும். சிங்காநல்லுார், இருகூரில் நடைமேடைகளை உயர்த்த வேண்டும். இருகூர் ஸ்டேஷனை கோவை கிழக்கு இருகூர் சந்திப்பு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K N GOPALAN
செப் 27, 2026 15:55

கோவை தெற்கு முனையம் என்று அறிவித்து போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரயில்களும் துவக்கப் படலாம்.கோவையை சுற்றி ஏற்கனவே உள்ள ரயில் பாதை வழியாக வடக்கு, பீளமேடு சிங்காநல்லூர் இருகூர் ஒண்டிபுத்தூர் சிங்கை தெற்கு நஞ்சுண்டாபுரம் போத்தனூர் இடையே புறநகர் ரயில் சேவை அவசியம். எந்த விதமான பெரிய அளவு செலவு செய்து கட்டுமான பணி இல்லாமல் இந்த சேவையை நடைமுறைப் படுத்தலாம் கூடிய விரைவில் இருகூர் போத்தனூர் இடையே இரண்டாம் ரயில் பாதை அமைக்கும் பட்சத்தில் சுற்றுவல ரயில் சேவையை இரு புறங்களிலும் இயக்கலாம். இச் சேவை பள்ளி கல்லூரி மாணவர்கள், மற்றும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.திருச்சி அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்


புதிய வீடியோ