ரயில்வே அமைச்சர் கோவை வருகை
கோவை; ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கோவை வந்தார்.ரயில்வே மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் நேற்று கேரளா மாநிலத்தில் உள்ள பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைதொடர்ந்து, கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் கோவை ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு வந்தார். அவருக்கு சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், கட்சியினர், தொழில்துறையினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் சேகர், பேராசிரியர் கனகசபாபதி ஆகியோரும் வரவேற்றனர்.தொடர்ந்து, ரயில்வே பயணிகள் அமைப்பினர், கோவை மாவட்ட தொழில் துறையினர் உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து, ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட, மத்திய அமைச்சர் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து மும்பை புறப்பட்டார்.