ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
கிணத்துக்கடவு: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும், 34 ஆயிரம் ரேஷன் கடை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கான, ஊதியக்குழு கமிட்டி அமைத்தல், தாயுமானவர் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கம் செய்தல், அனைத்து பணியாளர்களுக்கும், 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, பல மாதங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வரை அரசு இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் அலட்சியம் காட்டுவதால், ஜனவரி 5ம் தேதி முதல் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள், வேலை நிறுத்தம் சார்ந்த பேட்ஜ் அணிந்து, நேற்று பணிக்கு வந்தனர். இது குறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: ரேஷன் கடை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டுமென பல மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சம்பளக் குழு அமைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, 5 மாதங்களாகியும் குழு அமைக்க அரசு முன் வரவில்லை. இதனால் போராட்டத்தை அறிவித்துள்ளோம். மேலும், இதற்காக நேற்று முதல் சங்கம் சார்பில் பணியாளர்கள் அனைவரும் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, கூறினார்.