ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்கணும்! விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சூலுார், : ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்யக் கோரி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ரேஷன் கடைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை விற்பதை நிறுத்தி விட்டு, உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும், என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர் முனை இளைஞரணியினர், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, சங்கத்தின் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி, 11 மாவட்டங்களில், 100 ரேஷன் கடைகள் முன், 100 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.முதல் ஆர்ப்பாட்டம் சூலுார் ஒன்றியம், அருகம்பாளையம் ரேஷன் கடை முன் நேற்று நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் தங்கராஜ், ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் பேசுகையில், 'தமிழகத்தில், 65 சதவீத விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பி உள்ளனர். தென்னையில் கிடைக்கும் தேங்காய் மற்றும் கொப்பரை, தேங்காய் எண்ணெய் பொருட்களே அவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கின்றன. ஆனால், உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கள் இறக்கவும் அனுமதிக்கவில்லை. தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் என்ற எங்கள் பல ஆண்டு கோரிக்கையையாவது அரசு நிறைவேற்ற வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 100 நாட்கள் தொடர் போராட்டத்தை துவக்கி உள்ளோம்' என்றனர்.