உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரெட்பீல்ட்ஸ் வீடுகளுக்கும் ஆபத்து

ரெட்பீல்ட்ஸ் வீடுகளுக்கும் ஆபத்து

கோவை: ரேஸ்கோர்ஸில், வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை தொடர்ந்து, ரெட்பீல்டில் இருக்கும் சிதிலமடைந்த வீடுகளில் குடியிருப்போரையும் வெளியேற்ற, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸில், கலெக்டர் பங்களா பின்புறம் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான பிளாக் எண் 3ல் இருந்த தரைதளம் தவிர இரண்டு தளங்களை கொண்ட அரசு குடியிருப்பு, இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் இடிந்ததாலும் அதில் யாரும் இல்லாததாலும், அதிர்ஷ்டவசமாக அருகே இருந்த குடியிருப்போர் தப்பினர். இடிந்து விழுந்த வீட்டை நேற்று ஆய்வு செய்த, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், ஒட்டுமொத்த குடியிருப்பையும் இடித்து தரைமட்டமாக்கினர். உயிர்களுக்கு யார் பொறுப்பு? இடியும் நிலையில் இருக்கும் வீடுகளுக்கு, இன்னும் வீட்டுவசதி வாரியம் வீட்டு ஒதுக்கீட்டாணை வழங்கி வருகிறது. இடிந்து விழுந்து உயிர்பலி ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், மீதமுள்ள வீடுகளில் குடியிருப்போர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

'சிவப்பு' அட்டவணையில்

ரெட்பீல்டு குடியிருப்புகள்

ரெட்பீல்டு பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில், மொத்தம் 96 வீடுகள் உள்ளன. இதில் தரைதளத்துடன் இரண்டு அடுக்குகளை கொண்டு ஆறு வீடுகளுடன் நான்கு பிளாக்குகளில் 24 வீடுகளும், தரைதளத்துடன் ஒரே ஒரு மேல்தளத்துடன் கூடிய, 18 பிளாக்குகளில் ஒவ்வொரு பிளாக்கிலும் நான்கு வீடுகள் வீதம், மொத்தம்72 வீடுகள் உள்ளன. இந்த அடுக்குமாடி கட்டடங்களும், 1973-1975 ஆண்டுகளில் கட்டப்பட்டது. போதிய பராமரிப்பில்லாததாலும், 50 ஆண்டுகளை கடந்ததாலும், வீடுகளை காலி செய்ய வீட்டு வசதி வாரியத்தால், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி உள்ள இந்த வீடுகளில், இனியும் அரசு ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். பருவமழை வலுக்கும் முன், கலெக்டர் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

'சிபாரிசு கடிதத்துடன் வந்தாலும்

ஒதுக்கீட்டாணை வழங்கக்கூடாது'

கலெக்டர் பவன்குமார் கூறுகையில், ''இடியும் நிலையில் இருக்கும் வீடுகளுக்கு, சிபாரிசு கடிதத்துடன் வந்தாலும், ஒரு போதும் 'அலாட்மென்ட்' ஆர்டர் வழங்கக்கூடாது. சிதிலமடைந்த வீடுகளில் வசிப்போர், பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும்,'' என்றார். வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இடிந்து விழும் நிலையில் இருக்கும் வீடுகளுக்கு, அலாட்மென்ட் வாங்க சிபாரிசு கடிதத்தோடு வருகின்றனர். நாங்கள் வேறு வழியில்லாமல் உத்தரவு வழங்க வேண்டியுள்ளது. கலெக்டர் உத்தரவுக்குப்பின், இனி யாருக்கும் அலாட்மென்ட் ஆர்டர் வழங்க மாட்டோம். குடியிருப்போர் விரைவாக காலிசெய்து, வீடுகளை ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை