மேலும் செய்திகள்
சரவெடி: மனுக்களில் தெறித்த மக்களின் குமுறல்
22-Oct-2024
பலகார கடைகளில் உணவு துறை ஆய்வு
29-Oct-2024
கோவை ; கோவையில் இருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். மீண்டும் மீண்டும் வைக்கப்படுவதை தடுக்க, இரும்பு சட்டங்களும் உடனடியாக அறுத்தெடுக்கப்பட்டன.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஆங்காங்கே அனுமதியற்ற விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றாமல் நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஐ.ஆர்.சி., விதிமுறைப்படியும், தமிழக அரசின் உத்தரவுப்படியும் நெடுஞ்சாலை அருகாமையில் விளம்பர பலகை வைக்க அனுமதி தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே துறை ரீதியாக, மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் கடிதம் மூலமாக அறிவுறுத்தலும் வழங்கியுள்ளனர்.சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெறாமல், விளம்பரம் வைக்க மாநகராட்சி தரப்பில் யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாதென அறிவுரை வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றும் பணியில், நகரமைப்பு பிரிவினர் நேற்று ஈடுபட்டனர். பிளக்ஸ் பேனர்களை கிழிப்பதோடு நிறுத்தாமல், இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியிருக்கிறார். அதனால், ஒரே நேரத்தில் இவ்விரு பணிகளும் சேர்ந்து நடக்கின்றன.சுண்டக்காமுத்துார் முதல் பேரூர் வரையிலான ரோடு, கோவைப்புதுார் மெயின் ரோடு, துடியலுார், மருதமலை ரோடு, வீரகேரளம், வடவள்ளி மருதா நகர், இடையர்பாளையம் ரோடு செட்டி தோட்டம், நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த விளம்பர பலகைகள் மற்றும் இரும்பு சட்டங்கள் அகற்றப்பட்டன. இப்பணியை அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ள உதவி நகரமைப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
22-Oct-2024
29-Oct-2024