உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

வீடு ஒதுக்கி ஆர்டர் கொடுத்தாச்சுஆனா, இன்னும் சாவி கொடுக்கல

வால்பாறையில், பணம் கட்டியும் வீடு வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கிறாங்க... என பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.வால்பாறை காமராஜர் நகர் பகுதியில, குடிசை மாற்று வாரியத்தினர், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில ரூ.6 கோடியில, 116 தொகுப்பு வீடுகள் கட்டும் பணிய, 2020ம் ஆண்டு துவங்கினாங்க. தொகுப்பு வீடு தேவைப்படுவோரிடம், தலா ஒரு லட்சம் முன் பணமும் வாங்கினாங்க.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கடந்த இரண்டு ஆண்டுகளா வீடு கட்டும் பணி பாதியில நிற்குது. இதனால, வீடு கேட்டு விண்ணப்பித்திருந்த, 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் கடும் அதிருப்தியில இருக்காங்க.இப்ப, மீண்டும் வீடு கட்டும் பணிய துவங்கியதோட, கட்டி முடித்த வீடுகளுக்கு 25 பயனாளிகளுக்கு மட்டும் குலுக்கல் நடத்தி, ஆர்டர் கொடுத்து, கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றினாங்க. ஆனா, இன்னும் வீட்டோட சாவி கொடுக்கல. இதனால, ஆர்டர் பெற்ற பயனாளிகளும், பணம் கட்டி காத்திருக்கும் மக்களும் ஆளும்கட்சி மீது கடும் அதிருப்தியில இருக்காங்க. ஓட்டு மட்டும் கேட்க வரட்டும், அப்புறம் பாத்துக்கலாம் என்ற முடிவுல இருக்காங்கனு, சொன்னாங்க.

மிரட்டும் தொனியில் பேசுறாங்கபுலம்பும் பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகள் திறந்து வகுப்புகள் எப்படி போகுதுன்னு பார்க்க போயிருந்தோம். அங்க என்னடானா, வட்டார அளவிலான அதிகாரிகளோட போக்கு சரியில்லைனு, ஆசிரியர்கள் புலம்பிட்டு இருந்தாங்க.சாதாரண தகவல் அல்லது பள்ளிய பத்தின பதிவ கூட கல்வித்துறை அலுவலர்கள் மிரட்டும் தொனியில தான் கேக்கராங்க. அதனால, ஆசிரியர்கள் பேசறக்கே பயப்படுறாங்க.பள்ளியில ஒரு நல்ல விஷயம் பண்ணுறதுக்கு கூட அனுமதி வழங்க மறுக்கறாங்க. ஏன் பண்ணக்கூடாதுனு கேக்கறதுக்கும் பயமாதான் இருக்கு. பள்ளிக்கு யாராவது நன்கொடை கொடுத்தா வாங்கறதுக்கும் யோசிக்க வேண்டியிருக்கு.பெற்றோர் கோரிக்கையை கூட அந்த அதிகாரி கிட்ட சொல்ல முடியல. எப்ப பார்த்தாலும், ஒரு மாதிரியே பேசுறாங்க. எல்லாத்தையும் சகிச்சிட்டு இருக்கோம். என்ன பண்றது அவங்க அதிகாரிங்க, அப்படிதான் இருபாங்கன்னு சொல்லி, ஆசிரியர்களே ஆறுதல் படுத்திட்டாங்க.

உணவு கொடுக்கறதிலும்அரசியல் புகுந்து 'விளையாடுது'

பொள்ளாச்சியில், உடற்கல்வி ஆசிரியர் நண்பரை சந்தித்தேன். அவருடனான உரையாடலில் இருந்து...தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன், மாநிலம் முழுதும், 28 இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்படுது. அதில், கோவை மாவட்டத்த பொறுத்தமட்டில், தடகளம், வாலிபால், கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சி கொடுக்கறாங்க.இதுல, 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியர் பயனடையறாங்க. அவர்களுக்கான தங்குமிடம், உணவு, சீருடை, விளையாட்டு உபகரணங்கள் எல்லாம், அரசாங்கம் இலவசமா கொடுக்குது.மாணவர்களுக்கு சத்தான உணவு கொடுக்க, உணவுக்கான தொகை மாவட்ட விளையாட்டு அலுவலர் வாயிலாக கொடுத்திட்டு இருந்தாங்க. இப்ப, 'டெண்டர்' விட்டு, ஒப்பந்ததாரர் வாயிலாக உணவு வழங்க நடவடிக்கை எடுத்திருக்காங்க. ஒப்பந்ததாரர் எல்லாரும் அரசியல் பின்னணி இருக்கறவங்க.ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு... இப்ப, விளையாட்டு துறையிலயும், அரசியல் கட்சியினர் தலையிட்டு, விளையாட துவங்கிட்டாங்க. இது எங்க போய் முடிய போகுதோனு, புலம்பினாங்க.

அமைச்சர் முன் கேள்வி கேட்பாங்கனுபாசன விவசாயிகள புறக்கணிச்சுட்டாங்க!

அமராவதி பாசனத்துக்கு நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு விவசாயிகள் யாரும் போகல. கடும் அதிருப்தியில் இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.அமராவதி அணையிலிருந்து, ராஜவாய்க்கால் பாசனத்துல இருக்கற நிலங்களுக்கு தண்ணீர் திறக்கறாங்க. ஒவ்வொரு கால்வாயும், பல கி.மீ., நீளமிருக்கு. மண் மூடியும், புதர் மண்டியும் இருக்கு. பாசனத்துக்கு நீர் திறக்க அமைச்சர், ஆளும்கட்சியினருக்கு தகவல் கொடுத்த அதிகாரிகள், விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்காம, ரகசியமா வச்சிருந்தாங்க. நீர் திறப்பின் போது, ஆளும்கட்சியினரை தவிர, பாசன விவசாயிகள் பங்கேற்கவில்லை.வழக்கமாக, நீர் திறப்புக்கு முன், விவசாயிகள், நீர்வளத்துறை, வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பணும். அப்ப தான், மண் வாய்க்கால்கள துார்வாரி, மடைகளை சரி செய்ய முடியும். வேளாண் துறை, பருவத்திற்கு ஏற்ற நெல் விதை ரகங்கள், உரம், இடுபொருட்களை தயாராக வைத்திருக்கும்.அதிகாரிகளே முடிவு செய்து, ஆற்றில் நீர் திறப்பதால் பயனில்லை. அணை, வாய்க்கால் பராமரிப்புக்கு அரசு ஒதுக்கும் நிதியில முறைகேடு நடக்குது. விவசாயிக வந்தால், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் முன் கேள்வி கேட்பாங்கனு, தற்போதுள்ள அதிகாரி, விவசாயிகளுக்கு தகவல் சொல்லாம, நீர் திறக்க ஏற்பாடு செய்திருக்காருனு, சொன்னாங்க.

எல்லாத்தையும் சொல்ல முடியுமா?காரணமில்லாம 'பொங்கிய' இன்ஸ்.,

பொள்ளாச்சியில, மனநலம் பாதித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேரை போலீசார் கைது பண்ணினாங்க. அவங்க கிட்ட இருந்து கைப்பற்றின நகை மற்றும் பணத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காம, கையாடல் செய்த மகாலிங்கபுரம் எஸ்.ஐ.,யை கைது பண்ணினாங்க.இந்த வழக்குல என்ன நடந்ததுனு விசாரிக்க, அந்த ஸ்டேஷன் அதிகாரிகிட்ட நிருபர்கள் போயிருந்தோம். அவரு, 'இது எப்படி உங்களுக்கு தெரியும்; அப்படி தெரிஞ்சு வந்தாலும், இங்க கேட்கலாமா; எங்கள பத்தி எங்க கிட்ட கேட்டா சொல்லுவோமா. சொல்ல வேண்டியத சொல்லுவோம். எல்லாத்தையும் சொல்ல முடியுமா,' என, கோபமா பேசினாரு.எப்.ஐ.ஆர்.,ல என்ன விபரம் இருக்குனு, தகவல்கள் கேட்க ஸ்டேஷனுக்கு தான் வந்திருக்கோம். நீங்க ஏன் இப்படி பேசுறீங்கனு கேட்டதுக்கு, 'முடிஞ்சா... நான்சரியில்லைனு, என் மேல ரிப்போர்ட் பண்ணுங்க,' என சொன்னார்.இந்த வழக்குல, அவரு எதிர்பார்ப்புக்கு மாறா ஏதாவது நடந்துருச்சானு தெரியல. பொறுப்பா இருக்க வேண்டியவரு, இப்படி பொறுமை இழந்து பேசறாருனு நிருபர்கள் கேள்வி எழுப்பியதும், போலீசார் சமாதானப்படுத்தினாங்க. போலீஸ் அதிகாரிக்கு என்னாச்சு, எஸ்.பி., தான் விசாரிக்கணும்.

பஸ்ல பெண்கள பார்த்தாலே'ஓசி டிக்கெட்'னு திட்டறாரு!

கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, பெண்கள் சிலர் 33ம் நம்பர் அரசு டவுன் பஸ் கண்டக்டரை திட்டிய படி பஸ்சில் இருந்து கீழே இறங்கினாங்க. என்னன்னு கேட்டேன்.அரசு டவுன் பஸ்சில் பெண்கள் டிக்கெட் இல்லாம இலவசமா போய்ட்டு வர்றாங்கனு கண்டக்டர் எல்லாரையும் திட்டிக்கிட்டே இருக்காரு. அப்புறம் ஸ்டாப் வந்தா சொல்றது இல்லை. பஸ் ஸ்டாப் தள்ளி போன பிறகு, பஸ் நிறுத்த விசில் அடிக்கறாரு.பெண்களை பார்த்தாலே பஸ்ச தள்ளி நிறுத்தி ஓடி வந்து ஏற சொல்றாரு. ஸ்டாப்பில் இறங்கும் போது திட்டுவது, பஸ்சில் கடைசியில் சீட் இருந்தா ஆண்கள அழைத்து உட்கார வைக்கறாரு.ஏன்னு கேட்டா, நீங்க ஓசில போறீங்க, உங்களுக்கு எதுக்கு சீட், நின்னுகிட்டே வாங்கன்னு சொல்றாரு. இலவச பஸ் பயணம் வேணும்னு நாங்களா கேட்டோம். முதல்வர் தான் அறிவிச்சிருக்காரு. ஆனா, பஸ் கண்டக்டர் பெண்கள பார்த்தாலே 'ஓசி டிக்கெட்'னு திட்டறாரு. இந்த மாதிரி ஆளுக மேல, துறை ரீதியா நடவடிக்கை எடுக்கணும்னு சொன்னாங்க.

பட்டா மாறுதலில் 'சம்திங்... சம்திங்' நடக்குது

உடுமலை தாலுகா அலுவலகத்துக்கு விவசாயிகள் சிலர் வந்திருந்தனர். இந்த அதிகாரிகள் திருந்தவே மாட்டாங்களா என, நொந்து போய் புலம்பிக்கொண்டிருந்தனர். அவங்க பேசிக்கொண்டதில் இருந்து...அனைத்து வகை பட்டா மாறுதல்களுக்கும், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்னு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கு. அப்பத்தான், இடைத்தரகர்களை தவிர்க்க முடியும்னு சொன்னாங்க. ஜமாபந்தியில, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இதையே சொன்னாங்க.ஆனா, ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், வருவாய்த்துறையினர் சிலர் 'கறப்பதை' கறக்காமல் பட்டா மாறுதல் செய்யறதில்ல. 'ஆன்லைன்' விண்ணப்பங்களை 'பெண்டிங்' போட்டு, மக்களை நேரடியாக வந்து சந்திக்க சொல்றாங்க.குறிப்பா, நகரை உள்ளடக்கிய பிரதான வருவாய் கிராமத்தின் அலுவலகத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும், பட்டா மாறுதலுக்கு 'ெஹவி'யாக கவனிக்க சொல்றாங்க. தாலுகா அலுவலக செலவுக்கு தேவைப்படுதுனு சப்பைக்கட்டு கட்டுறாங்க. உயர் அதிகாரிகளுக்கும் 'சம்திங்' போகுதாம்.'கவனிப்பு' கிடைத்ததும், பெண்டிங்கில் இருக்கற விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, பட்டா மாறுதல் ஆகுது. இருக்கறவங்க, அதிகாரிகள கவனிச்சு பட்டா மாறுதல் செய்துக்கறாங்க. இல்லாதவங்க தான் அலைமோத வேண்டியிருக்கு. என்ன தான் டிஜிட்டல் மயமானாலும், வருவாய் துறையில 'கரன்சி'ய கண்ணுல காட்டினா தான் எல்லா வேலையும் நடக்குது. இதுக்கெல்லாம், எப்பத்தான் தீர்வு கிடைக்குமோ, என புலம்பியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ