உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ஆளுங்கட்சிக்காரங்க ஆதிக்கம் கோவில் நிலம் மீட்பதில் அலட்சியம்

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர், 'தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், கோவில் நிலங்களை மீட்க சொல்றாங்க. ஆனா, நம்ம ஊருல கோவில் நிலங்கள மீட்க அதிகாரிக தயங்கறாங்க,' என செய்திக்கு தகவல் கொடுத்தார். எங்கே, என்னனு விசாரிச்சேன்.நெகமம் பகுதியில் சென்றாயபெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 73.73 ஏக்கர் நிலம் இருக்கு. ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலைனு, ஹிந்து சமய அறநிலையத்துறையில சொன்னாங்க.இந்த முறை பாதுகாப்பு கொடுக்க போலீசார் தயாரா இருந்தாங்க. ஆனா, இந்த முறை அறநிலையத்துறையினர்,சர்வேயர் இல்ல, ஆக்கிரமிப்பு அகற்றுவதை ஒத்தி வைக்கலாம்னு சொல்லிட்டாங்க.இதுனால பிரச்னை ஏற்படும்னு நினைச்சு, மாவட்ட நிர்வாகத்துல பேசி, 'டேட்' முடிவு பண்ணிக்கலாம்னு கடைசி நேரத்துல சொல்லி, இந்த முறையும் ஒத்தி வைச்சுட்டாங்க.ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுக்கறதால அதிகாரிக தயக்கம் காட்டுறாங்க. கடைசி வரைக்கும் சாக்கு சொல்லிட்டே இருப்பாங்கனு தோணுது. கோவில் நிலத்தை மீட்க அரசுத்துறை அதிகாரிக இணைந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்னு, சொன்னாரு.

தொழிற்சங்கங்களோட போராட்டத்துலகலந்துக்காத தேயிலை தொழிலாளர்கள்

வால்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில், தொழிற்சங்கங்களை 'கேப்டன்' கட்சி நிர்வாகி விமர்சித்திருக்காரோ... என, தொழிலாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது உரையாடலில் இருந்து...வால்பாறையில மத்திய அரசைக்கண்டித்து 9ம் தேதி தொழிற்சங்கங்கள் சார்பில போராட்டம் நடத்தினாங்க. இந்த போராட்டத்துல, தொழிலாளர்கள் யாருமே கலந்துக்கல.ஏன்னா, தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த, சம்பளத்த வாங்கிக்கொடுக்க தொழிற்சங்கங்கள் முன்வரல. அதனால, 510 ரூபாய் சம்பளம் வாங்க வேண்டிய தொழிலாளர்கள், இப்ப, 446.23 ரூபாய் மட்டுமே வாங்கிட்டு இருக்காங்க. குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களோட செயல்பாடால தொழிலாளர்கள் பாதித்திருக்காங்க.இந்த நேரத்துல, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள், மாநில அரசிடம் பேசி அறிவித்த சம்பளத்த வாங்கிக்கொடுக்கல. இனியும், தொழிற்சங்கங்கள நம்பி தொழிலாளர்கள் யாரும் ஏமாற மாட்டாங்கனு, 'கேப்டன்' கட்சி நிர்வாகி விமர்சித்திருக்காரு. தொழிலாளர்களோட மனசுல இருந்த கேள்விய அவரு வெளிப்படுத்திருக்காருனு, பேசிக்கிட்டாங்க.

டிஜிட்டல் மயமானா மட்டும் போதாதுஉள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தணும்

உடுமலையில, நடப்பு கல்வியாண்டு துவங்கியதும், அரசு பள்ளிகள்ல இலக்கிய மன்ற விழாக்களும் வரிசை கட்டி நடக்குது. அதில கலந்துக்க போனப்ப, அந்த நடுநிலைப்பள்ளிகளில் துவங்க உள்ள, உயர்தர ஆய்வகங்கள் எந்த நிலையில இருக்குனு விசாரிச்சோம்.அதே ஏன் கேக்கறீங்கனு, ஆசிரியர்கள் அழுகாத குறையா புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு வருஷமா இந்த ஆய்வகம் துவங்குவதற்கு, பள்ளியில அதை செய், இதை செய்னு கல்வித்துறை அறிவுரை வழங்கிட்டே இருக்கு.இதனால, அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் எல்லாம் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஆய்வகம் அமைக்க மின்சார வசதி வழங்க ஊராட்சிகளுக்கு ஒரு மாதிரியும், நகராட்சிக்கு ஒரு மாதிரியும் வழிமுறை வழங்கியிருக்கு. அப்புறம் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த, மாத்தி மாத்தி வழிமுறை அறிவிச்சாங்க.இதனால, இப்ப என்ன ஆச்சுனா, கம்ப்யூட்டர் பொருத்தியது ஒரு குழு, மின்வசதி ஏற்படுத்துனது வேற குழு. பாதி பள்ளிகள்ல கம்ப்யூட்டர் 'ஆன்' ஆகல. இதை கல்வித்துறையில சொன்னாலும் கண்டுக்கல. டிஜிட்டல் மயமானால் போதாது, அதுக்கான உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தணும்னு, ஆதங்கத்த கொட்டினாங்க.

போராடினா தான் நடவடிக்கைபுகாருக்கெல்லாம் மதிப்பில்ல

பெதப்பம்பட்டி பேக்கரியில், இரு விவசாயிகள், 'போராட்டம் நடத்தினா தான், சுகாதாரத்துறை அதிகாரிங்க நடவடிக்கை எடுப்பாங்கனு,' பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பேச்சை கவனித்தேன்.நம்ம ஏரியா பக்கம், கோழிப்பண்ணைக இருக்கு. சில பண்ணைங்க ஊருக்கு பக்கத்துலேயே இருக்கறதால, மழைக்காலத்துல ஈ தொல்லை அதிகமாயிருக்கு. செத்த கோழிகள, குளத்து மேட்டுல, ஓடையில வீசுறாங்க.இந்த பிரச்னைய பத்தி, ஊராட்சி நிர்வாகம், தாலுகா ஆபீசு, சுகாதாரத்துறை ஆபீசருங்க கிட்ட புகார் தெரிவிச்சாலும் நடவடிக்கை எடுக்கறது இல்லை. சமீபத்துல பெரியபட்டி பக்கத்துல விவசாயிக போராட்டம் நடத்துன பிறகு, ஆய்வுக்கு போன, சுகாதாரத்துறை அதிகாரிங்க, ஒரு பண்ணையில விதிமீறல் இருக்குதுனு கண்டுபிடிச்சாங்க.அதுவும் போராட்டத்துக்கு அப்புறம் தான் அதிகாரிங்களுக்கு விதிமீறல் தெரிஞ்சிருக்கு. இதே மாதிரி பல ஊர்ல பிரச்னை இருந்தாலும், அவங்க கண்டுக்கறதே இல்லை. கேட்டா, ஆளுங்கட்சிக்காரங்க பிரஷர், அது... இதுன்னு சாக்கு போக்கு சொல்லுறாங்க.தேர்தலுக்கு முன்னாடி, இந்த பிரச்னைக்காக மக்கள் போராட்டம் நடத்த போறாங்க. அப்பவாவது அதிகாரிக நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்கும்னு, பேசிக்கிட்டாங்க.

போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தகட்சி நிர்வாகிக்கு கை உடைஞ்சிருச்சு

உடுமலை பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்திக்க போயிருந்தேன். அங்கு நின்றிருந்த இருவர், அரசியல் கட்சியினர், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்க முண்டியடிச்சதுல ஒருத்தருக்கு கை உடைஞ்சிருக்குனு, கிண்டலா பேசிக்கிட்டாங்க.உடுமலையில, அ.தி.மு.க.,சார்பில், கிரிக்கெட் போட்டி நடந்துச்சு. போட்டிய துவக்கி வைக்க வந்த முன்னாள் அமைச்சர், உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், பேட் பிடித்து, பந்தை அடிக்க முயற்சித்தாரு.பந்தை வேகமாக அடிக்க முயன்ற போது, போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்க முன்னால் வந்த துங்காவி நிர்வாகி காளீஸ்வரன் மீது, எதிர்பாராத விதமாக 'பேட்' அடிச்சுருச்சு. பந்து 'மிஸ்' ஆயிருச்சு.'பேட்'ல அடிவாங்கிய அவரு, வலி தாங்காம மயக்கமாயிட்டாரு. இதுல, அவரு கை உடைஞ்சிருக்கு. தனியார் மருத்துவமனையில சிகிச்சையில இருக்காரு. இனிமேல, இது போன்று முன்வரிசையில் 'போஸ்' கொடுக்க நிற்கும், அரசியல் கட்சியினர் கொஞ்சம் கவனமா இருக்கணும்னு, கமென்ட் அடித்து, அங்கிருந்து கிளம்பினாங்க.

குவாரியில விதிமீறி வெடி வைக்கறாங்ககுடும்பத்தோட போராட போறாங்க

கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை பார்க்க சென்றிருந்தேன். அங்கு வந்த நண்பர், கல்குவாரி விதிமீறல் அதிகமாயிருச்சுனு பேச ஆரம்பித்தார். என்ன நடந்ததுனு விசாரிச்சேன்.நெ.10.முத்தூரு பகுதியில, நிறைய கல்குவாரிக இருக்குது. இதுல, முருகானந்தம் என்பவரோட வீட்டுக்கு பக்கத்துல ஒரு குவாரி இருக்குது. இவரு சொந்த வேலையா வெளிய போயிருந்தாரு.அப்போ, இவரோட அப்பா மட்டும் வீட்டில் இருந்திருக்காரு. மதிய நேரத்துல திடீர்னு வீட்டுக்குள்ள சப்தம் கேட்டிருக்கு. கல்குவாரியில வெடி வெடிச்சதுல பாறை சிதறி, அதுல ஒரு கல் அவரோட வீட்டு ஓட்டுல விழுந்திருக்கு. ஓடுகள் உடைஞ்சு உள்ளே விழுந்திருக்கு.அவரு வீட்டுல குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் இருக்காங்க. இவங்க இருக்கிற நேரத்துல கல்லு விழுந்திருந்தா அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.இந்த கல்குவாரியில் விதிமீறி வெடி வைக்கறாங்கனு, ரெண்டு வருசமா உள்ளூர் அதிகாரியில இருந்து, கலெக்டர் வரைக்கும் மனு கொடுத்திருக்காரு. ஆனா, எந்த நடவடிக்கையும் இல்லை.இப்ப ஆதாரத்தோட கலெக்டர சந்திச்சு மனு கொடுக்க முடிவு பண்ணியிருக்காரு. நடவடிக்கை இல்லைனா, குடும்பத்தோட கல்குவாரியில போராட்டம் நடத்த முடிவு பண்ணியிருக்காரு. இதுக்கு, பொதுமக்கள் ஆதரவும் கிடைச்சிருக்குனு, நண்பர் சொன்னார்.

தி.மு.க.,வினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அரசு ஊழியர்

பொள்ளாச்சியில், நண்பர் ஒருவரை சந்தித்தேன். தி.மு.க.,வினர் குறித்து அவர் சொன்னதில் இருந்து...தி.மு.க.,வினர், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சிக்காக வீடு, வீடாக போய் உறுப்பினர் சேர்க்க முயற்சி பண்ணுறாங்க. அதுல, நந்தனார் காலனிக்கு தி.மு.க.,வினர் போயிருந்தாங்க.அப்போ, ஒரு வீட்டில் தி.மு.க.,வினர், அரசின் திட்டங்கள், சாதனைகளை குறித்து விளக்கமாக சொன்னாங்க. கட்சியில் உறுப்பினர்களாக சேர விருப்பம் உள்ளதா என, வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டாங்க.அதுக்கு, வீட்டில் இருந்த நபர், 'அரசு ஊழியராக இருக்கேன். நான் தி.மு.க.,வுக்கு தான் இவ்வளவு நாளும் ஓட்டு போடுறேன். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு அவர் தானுங்க முதல்வர்னு, ஒரே போடா போட்டுட்டாராம்.இத கேட்ட, தி.மு.க.,வினர் சிரிப்பை அடக்கிக்கொண்டு, வாங்கப்பா அடுத்த வீட்டுக்கு போவோம்னு சொல்லிட்டு கிளம்பியிருக்காங்க. அங்கிருந்த இன்னொரு வீட்டுல, 'பக்கத்து வீட்டுல இருக்கற பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்குது. நானும் ரெண்டு தடவை விண்ணப்பித்தும் உதவித்தொகை கிடைக்கலைனு, நறுக்குனு கேட்டிருக்காங்க. தேர்தல் வரைக்கும் இன்னும் என்னென்ன பண்ணுவாங்கனு தெரியலைனு, சொன்னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி