ரிப்போர்ட்டர் லீக்ஸ்
எந்த ஆட்சி வந்தாலும் ஜி.எச்., ல் சிரமம் தான் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல், அவசர சிகிச்சை பிரிவுக்கு முன் முதியவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதாவது: ஜி.எச்., ல, எத்தனை திட்டத்தை செயல்படுத்தினாலும், மக்கள் படற கஷ்டம் மாறாது. இந்த ஜி.எச்.,க்கு புதிய கட்டடம் கட்ட, பழைய கட்டடத்தை இடிச்சுட்டாங்க. எத்தனையோ நவீன முறைகள் இருந்தாலும், மக்களை பாதிக்கற மாதிரி, பல வாரம் கட்டடத்தை இடிச்சு அப்புறப்படுத்தினாங்க. போன மாசம் இந்த ஜி.எச்.,க்கு சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் விசிட் அடிச்சாரு. அவரும் பல குறைகள கண்டுபிடிச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகள போனில் கூப்பிட்டு, பல்வேறு அறிவுரைகளை சொன்னாரு. இதனால, முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைச்சுரும் அப்படின்னு எல்லாம் நம்பிட்டு இருந்தோம். அமைச்சர் விசிட்டுக்கு அப்புறம் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருத்தரும், உடுமலை ஜி.எச்., ல ஆய்வு செய்ய போறாரு. அப்ப வேலைய செய்யாத பலரும் சிக்க போறாங்க; மக்களும் நேரடியாக தங்கள் குறைகளை சொல்லலாம் அப்படின்னு காத்திருந்தாங்க. ஆனா உயர் அதிகாரி, திடீர் விசிட் வராம, ஆய்வு தேதி, நேரம் எல்லாத்தையும் முன்னாடியே சொல்லிட்டாங்க. இதனால, அலுவலர்கள் உட்பட தயாராக இருந்தாங்க. ஆனா அறிவிச்சபடி, அந்த உயர் அதிகாரிகள் அந்த நாளில் ஆய்வுக்கே வரவில்லை. இதனால், ஜி.எச்., ல, எந்த நடைமுறையும் மாறாம, வழக்கம் போல மக்கள் பாதிச்சுட்டுதான் வர்றாங்க. அமைச்சரை நேரடியாக விசிட் அடிச்சு, உடனடியாக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சொல்லியும், ஒரு பலனும் இல்லை. அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், சாமான்யர்கள் பேச்சு எப்படி எடுபட போகுது. எந்த ஆட்சி வந்தாலும், ஜி.எச்.,ல சிகிச்சைக்கு வந்தா கஷ்டப்படத்தான் வேணும் என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்றனர். மகளிர் உரிமை தொகையில பாரபட்சம்ஆளும்கட்சி மீது கடுப்புல இருக்காங்க! கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுல நண்பர்களை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு வந்த நண்பர்கள், மகளிருக்கு உரிமை தொகை அஞ்சாயிரம் ரூபா போட்டாங்க. இதனால உரிமைத்தொகை கிடைக்காத மக்கள் கடுப்புல இருக்காங்க தெரியுமானு பேச ஆரம்பித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து... மகளிர் உரிமைத்தொகைக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விண்ணப்பம் வாங்கும் போதே, ஆளும்கட்சிக்காரங்க தலையீடு இருந்துச்சு. ஆள பார்த்து மனு வாங்கினாங்க. சொந்தமா கார் இருக்கக்கூடாது, வருமான வரி தாக்கல் செய்திருக்கக்கூடாதுனு நிபந்தனைகளை சொன்னாங்க. ஆனா, அடுக்குமாடி வீடு கட்டி வசதியா இருக்கறவங்களுக்கும், பைனான்ஸ் பண்ணுறவங்களுக்கும், வருமானத்த மறச்சு ஏமாத்தறவங்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைச்சிருக்கு. வருமானத்த கணக்கு காட்டி பேங்க் லோன் வாங்கி, வீடு கட்டினவங்க. வாகனம் வாங்கினவங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கல. அதே மாதிரி, ஆளுங்கட்சி காரங்க சிலர், அ.தி.மு.க., பா.ஜ., கட்சிக்காரங்களுக்கு எதுக்கு மகளிர் உரிமைத் தொகைனு அதிகாரிகள வச்சு அந்த விண்ணப்பங்கள 'ரிஜெக்ட்' பண்ணிட்டாங்க. இப்ப, வசதியானவங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குது. நடுத்தர மக்களுக்கு கிடைக்கல. இதனால, பெண்கள் நிறைய பேரு ஆளும்கட்சி மீது கடுப்புல இருக்காங்க. இது மட்டும் இல்ல இந்த எலக்சன்ல வேற கட்சிக்கு ஓட்டு போட தயாராயிட்டாங்க. ரேஷன் கார்டு இருக்கற குடும்ப தலைவிகளுக்கு பாரபட்சமில்லாம உரிமைத்தொகை கொடுத்திருக்கலாம். இதுபற்றி, கட்சி மேலிடத்துக்கு ஆளும்கட்சி ஐ.டி., பிரிவினர் கருத்து தெரிவிச்சிருக்காங்களாம், என்றனர். அரசு திட்டத்தை கூட அறிவிக்காமமூடி மறைக்கும் வனத்துறை ஆனைமலை அருகே சேத்துமடையில் நடந்த வனத்துறை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு நடந்த சம்பவங்கள் பல நெருடல்கள ஏற்படுத்தியிருக்கு. வனத்துறையில நடக்கறது எல்லாமே எப்பவுமே மர்மமா இருக்கும். காப்புக்காட்டுல தேவையற்ற மரத்த வெட்ட அனுமதி கொடுத்து, வனத்துக்கு உகந்த ஏராளமான மரத்தையும் வெட்டி கடத்திட்டாங்க. இது எதுவும் வெளி உலகத்துக்கு தெரியக்கூடாதுனு, பத்திரிகைகாரங்க யாரையுமே உள்ள விடுறது இல்ல. இப்ப, 'டிரக் தமிழ்நாடு' திட்டத்துல தங்கும் விடுதிகள் கட்டும் பணிகள் நடந்திருக்கு. இப்படி ஒரு திட்டம் இருக்கு, விடுதி கட்டுறத அறிவிக்கவே இல்ல. வனத்துறை அமைச்சர் வந்து விடுதிகள திறந்து வச்ச போது தான், இப்படி ஒரு திட்டப்பணி நடந்ததே தெரியுது. திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்குனாங்க, எது எதுக்கு எவ்வளவு செலவு பண்ணினாங்கனு தெரியல. எல்லாமே மர்மமா இருக்கு. அரசு திட்டம் குறித்து வனத்துறை அமைச்சருக்கு கூட தெரியலையோ என்னவோ, அவரும் விடுதி கட்டியிருக்காங்க, விரைவில் பயன்பாட்டுக்கு வரும்னு, சொல்லிட்டு கிளம்பிட்டாரு. இப்படி இருந்தா, அரசு திட்டம் எல்லாம் மக்களுக்கு எப்படி தெரியும். மக்கள் எப்படி பயன்படுத்துவாங்க. அரசு மக்களுக்காக செயல்படணும். ஆனால, வனத்துறையினர் நடவடிக்கை எதுவுமே அப்படி இல்லைங்கற மாதிரி அந்த நிகழ்ச்சி இருந்துச்சு. எந்த தப்பும் உயர் அதிகாரிகளுக்கு தெரியக்கூடாது. உயர் அதிகாரிகள குளிர்விக்கணும். இருக்கற இடத்துல கெட்டியா இருக்கணும்னு செயல்பட்டாங்க. இதையெல்லாம் பார்க்கும் போது, சமூகவலைதளத்துல பரவுவது போல, அப்படியிருக்குமோ... இப்படி இருக்குமோனு தான் நினைக்க தோன்றியது. ஆக்கிரமிப்பு கடைகள அகற்றுவதில்அதிகாரிகள் பாரபட்சம் காட்டலாமா? வால்பாறையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில், ஆளும்கட்சிக்கு ஆதாரவாக அதிகாரிகள் செயல்படாறங்கப்பா... என, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்களது உரையாடலை கவனித்தேன். வால்பாறை மலைப்பாதையில சாலையோரக்கடைகள் பெருகிட்டு வருது. அதனால, போக்குவரத்து நெரிசல் ஏற்படுது. அந்த கடைகள்ல இருந்து வீசும் கழிவுகளால, வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுது. அதனால, வனத்துறை அதிகாரிகளோட யோசனைப்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக சமீபத்தில் வாட்டர்பால்ஸ்ல இருந்து அய்யர்பாடி வரைக்கும் இருந்த ரோட்டோர கடைகள அகற்றினாங்க. ஆனா, மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில சாலையை ஆக்கிரமித்தும், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்தும் இருக்கற கடைகள அகற்றவில்லை. வால்பாறை நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அவதிப்படுறாங்க. இதனால, மக்கள் ரோட்டில் நடந்து போகும் போது வாகனங்கள் உரசி விபத்தும் ஏற்படுது. இவ்வளவு பிரச்னை இருந்தாலும், வால்பாறையில் இருக்கற ஆக்கிரமிப்பு கடைகள அகற்றாத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தியில இருக்காங்க. ஒவ்வொரு ஆக்கிரமிப்பு கடைக்கு பின்னணியில ஆளும்கட்சிக்காரங்க இருக்காங்க. அதனால, ஆக்கிரமிப்பு கடைகள் மீது கை வைக்க அதிகாரிகளும் தயங்கறாங்க. அதிகாரிக ஆளும்கட்சிக்கு விசுவாசமா நடக்கறதால மக்கள் தான் பாதிக்கறாங்கனு பேசிக்கிட்டாங்க.
துாய்மை பணியாளர் காலை உணவு திட்டத்துல கை வச்சுட்டாங்க!
உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நண்பரை சந்தித்தேன். துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துல விதிமீறல் நடக்குதுனு தகவல் கொடுத்தார். அவரிடம் விசாரிச்ச போது கிடைத்த தகவல் இதோ... உடுமலை நகராட்சியில, 241 பேருக்கு, 1.45 கோடி ரூபா செலவுல துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுது. இந்த திட்டத்துக்கு உணவு தயாரித்து வழங்க, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியிருக்காங்க. அந்நிறுவனம், பழநியில சமையல் கூடம் அமைச்சு, அங்கிருந்து உடுமலைக்கு உணவு கொண்டு வருது. அந்த உணவும் தரமில்லாம இருக்கு. ஆறிப்போய் பழைய சோறு போல இருக்கறதால, சாப்பிட முடியாம குப்பையில துாக்கி வீசுறாங்க. பெரும்பாலான, துாய்மை பணியாளர்க உணவை வாங்காம தவிர்க்கறாங்க. அவங்களுக்கு தினமும் சூடாகவும், சுவையாகவும் காலை உணவு வழங்கணும். உள்ளூரிலேயே சமையல் கூடம் இருக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் இருக்கு. ஆனா, விதிமீறி டெண்டர் வழங்கி, 'மெனு' படி உணவு கொடுக்காம, பழைய உணவ கொடுக்கறதாகவும், அதிகாரிக அந்த உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யறதில்லைனு புகார் எழுந்திருக்கு. முதல் நாள் துவக்க விழாவில் வழங்கப்பட்ட உணவு கூட சரியில்லை, என, நகராட்சி கூட்டத்திலும் எதிரொலித்தது.அரசு பல கோடி ரூபாய் செலவழித்து வழங்கும் காலை உணவு தரமில்லாததால, துாய்மை பணியாளர்கள் விரைவில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருக்காங்க. இதுமட்டுமில்லாம, நகராட்சியில வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்க வழங்கப்பட்ட வாகனம், மக்கும் குப்பை, மக்காத குப்பை தனித்தனியாக சேகரிக்கும் வகையில், வண்டியில் வைக்கப்படும் பிளாஸ்ட்டிக் டிரம்கள் சிதிலமடைந்திருக்கு. இதையும் அதிகாரிக கண்டுக்கறதில்லைனு, சொன்னார்.