வடகோவை ரயில்வே ஸ்டேஷனில் புறக்காவல் நிலையம் வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை
கோவை : ரயில்வே பயணிகள் நலச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை நுண்ணறிவுப் பிரிவு இடையேயான ஆலோசனைக் கூட்டம், கோவை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று நடந்தது. கோவை, போத்தனுார், வடகோவை உள்ளிட்ட பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், மேம்படுத்த வேண்டிய பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயணியர் நலச்சங்கங்கள் சார்பில், 'வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அங்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆர்.பி.எப்., புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். போத்தனுாரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை நுண்ணறிவுப்பிரிவு கமாண்டர் அப்துல் கோயா தலைமை வகித்தார். கோவை ரயில்வே ஸ்டேஷன் நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ., சந்திரசேகர், கோவை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜமீல் அகமது, பொருளாளர் சண்முகம், தெற்கு ரயில்வே ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க உறுப்பினர் நடராஜன், போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.