கோவை மெமு பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் இருந்து, கோவை சென்று வரும் மெமு பாசஞ்சர் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக, போத்தனுாருக்கு மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. காலை, 8:20, 10:55, மதியம்,1:05, மாலை, 4:45, 6:55 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக போத்தனுாருக்கு மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது.அதே போன்று போத்தனுார் மற்றும் கோவையிலிருந்து ஐந்து முறை பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ளன. தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். காலை 8:20 மணிக்கு செல்லும் இந்த ரயிலில், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்கின்றனர். அதனால் பெட்டிகளில் போதிய இடவசதி இல்லாததால், பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ''மெமு பாசஞ்சர் ரயில், கோவைக்கு சென்று வருவதால், கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு, மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. இந்த ரயிலில் காலை நேரங்களில், பெட்டியின் உள்ளே, நிற்பதற்கு கூட இடமில்லாத அளவிற்கு, பயணிகள் மிகவும் நெருக்கமாக நின்று வருகின்றனர். மேலும் சிலர் படிக்கட்டுகளிலும் தொங்கி வருகின்றனர். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெமு பாசஞ்சர் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.