சிதிலமடையும் கால்நடை மருந்தகங்கள் புனரமைக்க கோரிக்கை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்டத்தில், கால்நடை மருந்தகங்கள் செயல்படும் கட்டடங்கள் சிதிலமடைந்து வருவதால், அவற்றை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பால் உற்பத்திக்காக மாடு வளர்ப்பில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, இறைச்சிக்காக ஆடு மற்றும் கோழி வளர்க்கப்படுகிறது. குறிப்பாக, 118 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில், 39 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, கால்நடைகளுக்கு, நோய் பாதிப்பை கண்டறிதல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை சரிபார்ப்பு உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கால்நடை டாக்டர், உதவியாளர் என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து கால்நடை மருந்தகங்களும் துறை சார்ந்த சொந்த கட்டடங்களில் செயல்படுகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கால்நடை டாக்டர்கள் கூறியதாவது: கால்நடை மருந்தகங்களில், இரவு காவலர், துாய்மைப் பணியாளர்கள் கிடையாது. இதனால், அனைத்து கட்டட வளாகங்களும் புதர் மண்டி காணப்படுகிறது. அதிலும், கட்டடங்களில் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பல கட்டடங்களில் கான்கிரீட் பெயர்ந்து, சிதிலமடைந்து காணப்படுகிறது. மருந்துவப் பொருட்கள், பணியாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. சிதிமடைந்த கட்டடங்களை புனரமைக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, கூறினர்.