உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க கோரிக்கை!

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க கோரிக்கை!

கோவை; தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மழலையர் வகுப்புகள் எனப்படும், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள், 2018 முதல் அரசு பள்ளிகளில் தொடங்கி, நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 2,000க்கு அதிகமான அரசு பள்ளிகளில், இவ்வகுப்புகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், அங்கன்வாடி மையங்கள் செயல்படும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் புதிய முன்பருவ வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக பள்ளி மேலாண்மை குழு சார்பில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் 8,409 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும், அரசு உதவி பெறும் 5,059 துவக்கப் பள்ளிகள், 1,548 நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகள் தொடங்க ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் விரும்புகின்றனர். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'அரசு பள்ளிகளில் உள்ளதை போல், அரசு உதவிப் பள்ளிகளிலும் முன்பருவ வகுப்புகள் தொடங்கினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் ஒரே வளாகத்தில் அதாவது, பள்ளி வளாகத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. இதனால், மாணவர்கள் ஒரே கல்விச் சூழலில், அடிப்படைக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்' என்றனர்.

கோவை அரசுப்பள்ளிகளில்

எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பு

கோவையில், ஆனைமலை, வால்பாறை உட்பட 13 வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளில், 105 பள்ளிகளில் தற்போது முன்பருவ வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில், எல்.கே.ஜி. வகுப்பில் 1,179 மாணவர்கள், யூ.கே.ஜி. வகுப்பில் 1,536 மாணவர்கள் என மொத்தம் 2,715 மாணவர்கள், நடப்பு கல்வியாண்டில் பயின்று வருகின்றனர். மாநகராட்சி ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக 59 பள்ளிகளில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி