தரமற்ற விதையால் மகசூல் பாதிப்பு ஆய்வு செய்ய கோரிக்கை
குடிமங்கலம்: தரமில்லாத விதைகளால், கொத்தமல்லி செடிகள் போதிய வளர்ச்சி இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், ஆலாமரத்துார் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி, ஆலாமரத்துார் சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.அவ்வகையில், ஆலாமரத்துார் கிராமத்தில், நடப்பு சீசனில், தழை (இலை) கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். இதில், தரமற்ற விதைகளால், செடிகள் போதிய இலைகள் விடாமல், மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.விவசாயி சரவணக்குமார் கூறியதாவது: நடப்பு சீசனில், 2.5 ஏக்கரில், தழை கொத்தமல்லி விதைப்பு செய்தேன். தனியார் விற்பனை நிலையத்தில் விதை வாங்கினேன். விதைத்து பல வாரங்களுக்கு பிறகு, சுமார் ஒரு ஏக்கர் பரப்பில், செடிகள் சரியாக வளர்ச்சியடையவில்லை.போதிய இலைகள் இல்லாமல் குச்சியாக காணப்படுகிறது. இலை மகசூல் இல்லாததால், ஒரு மாத உழைப்பு வீணாகியுள்ளது; ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.தனியார் விதை விற்பனையாளர், விதை நிறுவனத்தினர் உரிய விளக்கமளிக்க மறுக்கின்றனர். தோட்டக்கலைத்துறை மற்றும் விதை சான்று துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.ஒவ்வொரு சீசனிலும் இப்பிரச்னை தொடர்கதையாக இருப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.