39 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு; முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
பொள்ளாச்சி ; காடம்பாறை அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள், 39 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சந்தித்து, அப்போதையஆசிரியர்களை கவுரவித்தனர்.வால்பாறை அடுத்த காடம்பாறையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து நட்பை தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு அமைத்து, 1985 முதல் 1995 வரையிலான காலகட்டங்களில் பயின்ற மாணவர்களை ஒருங்கிணைத்து, சந்திப்பு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டனர்.அதன்படி, நேற்றுமுன்தினம், காடம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி அரங்கில், 'கல்விக் கோவில் புனரமைப்பு' என்ற தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் மாணவர்கள், 75 பேர் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு, நினைவுகளை உற்சாகமாக பகிர்ந்து கொண்டனர். சக நண்பர்கள், தோழிகளுடன் 'செல்பி'யும்எடுத்துக் கொண்டனர்.மேலும், அப்போதைய தலைமையாசிரியர் கோவிந்தராஜ், ஆசிரியர் தங்கமணி ஆகியோரை, மேடையில் கவுரவித்து, நினைவுப்பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.அதேபோல, ஆசிரியர்களும், தங்களது பள்ளி அனுபவ நாட்களை நினைவூட்டி, முன்னாள் மாணவர்களை நெகிழ்ச்சியடைச்செய்தனர். தற்போதும், உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், திரட்டிய நிதி வாயிலாக சீரமைப்பு பணி மேற்கொள்ள அனைவரும் உறுதியளித்தனர்.