உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு புத்துயிர் கொடுங்க! நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்

அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு புத்துயிர் கொடுங்க! நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்

பொள்ளாச்சி; 'சித்தா மருத்துவ பிரிவுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, நல்லட்டிபாளையம், பெரியபோது, உடுமலை, மடத்துக்குளம், ஜல்லிபட்டி, எரிசனம்பட்டி அரசு மருத்துவமனைகளில், சித்த மருத்துவப்பிரிவு இயங்கி வருகிறது.இப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள், நாள்பட்ட நோய்கள், சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை பார்க்க சித்த மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.மேலும், சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி உள்ளிட்டவைக்கும் சிகிச்சை பெற மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா காலத்தில் நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்றவை சித்தா பிரிவு சார்பில் வழங்கப்பட்டன.இந்த பிரிவுக்கு தற்போது மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால், இந்த பிரிவில் போதிய வசதிகள் இல்லாத சூழல் உள்ளது.

தட்டுப்பாடு

தமிழகத்தில், 954 சித்தா மருத்துவ பிரிவுகள் உள்ளன. அதில், 100க்கும் மேற்பட்ட உதவி மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களை தவிர, அனைத்து சித்தா மருத்துவ பிரிவுகளிலும் மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால், சித்த மருத்துவ பிரிவுகளை துாய்மையாக பராமரிக்கவும், துாய்மையாக பராமரிப்பதில் சிரமம் உள்ளது. மேலும், நோயாளிகளுக்கு தேவையான நிலவேம்பு தயாரிக்கவும், மூலிகை தோட்டங்கள் பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.பணியாளர்கள் இல்லாத சூழலில், டாக்டரே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபடி இதையும் கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது.

படுக்கை வசதி தேவை

பொள்ளாச்சி, உடுமலையில் உள்ள அரசு சித்த மருத்துவமனைக்கு, 50 படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்.தமிழக அரசு சித்தா மருத்துவத்தை மாநில மருத்துவமாக அறிவித்து, போர்க்கால அடிப்படையில் அனைத்து பணியிடங்களையும் தோற்றுவித்து நிரப்ப, பொதுமக்கள் நலன் கருதி போதுமான மருந்துகளை வழங்க வேண்டும்.

மேம்படுத்தணும்!

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சித்தா மருத்துவம், மக்களிடம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இயற்கையான முறையில் வழங்கப்படும் சிகிச்சையால், நோய்கள் குணமடைகின்றன. இதனால், மக்கள் சித்தா பிரிவை தேடி வருகின்றனர். இந்நிலையில், காலிப்பணியிடங்கள் போன்ற பிரச்னைகளால், மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.மேலும், மருத்துவமனைகளில் சித்தா பிரிவுக்கு குறுகிய கட்டடமே ஒதுக்கப்படுகின்றன. அதற்குள் சிகிச்சை அளிக்க கூடிய உபகரணங்கள், மருந்துகளை வைக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழ் பாரம்பரிய மருத்துவமான, சித்தாவுக்கு புத்துயிர் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மாவட்ட அலுவலர் பணியிடமும் காலி!

தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களில், 22 மாவட்டங்களில் மட்டுமே மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. 16 மாவட்டங்களில் சித்தா மருத்துவ அலுவலகம் தோற்றுவித்து நிரப்பப்படாததால், ஒரு மாவட்ட சித்தா மருத்துவ அலுவலரே பல மாவட்டங்களை நிர்வகித்து வருகின்றனர்.அவர்கள், மருந்து ஆய்வாளர்களாகவும், போலி மருத்துவர்கள், போலி மருந்து நிறுவனங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே, காலியாக உள்ள இடங்களிலும், மாவட்ட மருத்துவ அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ