கடைகளுக்கு எடை குறைவாக சப்ளையாகும் அரிசி மூட்டைகள்; சரி செய்ய ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை
கோவை; ரேஷன்கடைகளுக்கு குடோன்களில் இருந்து சப்ளை செய்யப்படும், உணவு தானிய பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:ரேஷன் கடைகளில், புளூடூத் இணைப்பு தராசு வாயிலாக எடை போட்டு பொருட்கள் வழங்கப்படும் நடைமுறை, ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்துள்ளது.ரேஷன்கடைகளுக்கு, குடோன்களில் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானிய பொருட்கள், சரியான எடையில் சப்ளை செய்யப்படுவதில்லை. மூட்டைக்கு இரண்டு முதல், மூன்று கிலோ வரை எடை குறைவாக சப்ளை செய்யப்படுகிறது. கார்டுதாரர்களுக்கு புளூடூத் தராசில் எடை போட்டு, கடை ஊழியர்கள் வழங்கும் போது, கடையில் உள்ள தானிய இருப்பு குறைகிறது.அதற்கு கடை ஊழியர்களால், கணக்கு காட்ட முடியவில்லை. அதனால் ரேஷன்கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரிசி உள்ளிட்ட தானியங்களை, சரியான எடை அளவில் சப்ளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.