மேலும் செய்திகள்
படைகளை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை.
13-May-2025
பொள்ளாச்சி; போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரோடாக, பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை மாறியுள்ளது. ஆங்காங்கே ரோடுகள் பெயர்ந்து விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மரண பயத்துடன் பயணிக்கும் நிலை நீடிக்கிறது.பொள்ளாச்சி - உடுமலை ரோடு விரிவாக்கம் செய்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. நடைபாதை ஆக்கிரமிப்பு, குறுகலான சர்வீஸ் ரோடு என பல பிரச்னைகளால் குடியிருப்பு வாசிகள் மட்டுமின்றி, அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இந்த ரோடு விரிவாக்கம் செய்தது முதல், விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இப்பகுதியை சேர்ந்த மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, கடந்த, 1996ம் ஆண்டு முதல், 99ம் ஆண்டு வரை, 325 விபத்துகளும், 37 உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதன்பின், விபத்துகள் எண்ணிக்கை குறையாமல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான விபத்துகள், 100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும்; சர்வீஸ் ரோடு குறுகலாக இருப்பதால், சென்டர் மீடியன் இரும்பு கம்பிகள் அகற்றப்பட வேண்டும். பஸ் ஸ்டாப் வசதி ஏற்படுத்த வேண்டும். சென்டர் மீடியனில், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.இந்த ரோட்டை சீரமைக்க, முன்னாள் எம்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தற்போதைய எம்.பி.,யும், இரு முறை உடுமலை ரோட்டை ஆய்வு செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. ரோடு உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரோடாக மாறியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆய்வு மட்டுமே நடக்குது!
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு மனமில்லை. ஒவ்வொரு முறை ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதும்; அதன்பின் புதியதாக வரும் அதிகாரிகள் மீண்டும் முதலில் இருந்து ஆய்வு செய்வதும் தொடர் கதையாக உள்ளது.இந்த ரோட்டை மாநில நெடுஞ்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. அதன்பின், மாநில நெடுஞ்சாலை தரப்பில் ரோட்டை சீரமைத்து ஒப்படைத்து தர வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவும் ஒரு முடிவு இல்லாமல் உள்ளது.தற்போது, ரோட்டின் நிலை மிக மோசமாகியுள்ளது. குழிகள் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உள்ளது. ரோட்டில் உள்ள குழியை பார்த்துவாகன ஓட்டுநர்கள் ஒதுங்கி செல்ல முற்படும் போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதிக்கொள்வது தொடர்கிறது. உச்சகட்ட காமெடி
மழை காலங்களில், மழைநீர் தேங்குமிடமாக மாறிவிடுவதால் குழிகள் தெரியாமல் ஓட்டுநர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டாலும் சீரமைக்கத்தான் நடவடிக்கை இல்லை.பரிதாப நிலைக்கு மாறியுள்ள இந்த ரோடு, தேசிய நெடுஞ்சாலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இப்படி இருக்கும் ரோட்டில், வாகன வேகத்தை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பட்டை கோடுகள் போட்டது தான் உச்சகட்ட காமெடி.இந்த ரோட்டில் பயணிக்காத அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளே இல்லை. ஆனால், யாரும் அக்கறை காட்டாதது ஏன் என தெரியவில்லை. விபத்துகளுக்கு வழிவகுக்கும் இந்த ரோட்டுக்கு ஒரு விடியல் காண வேண்டும் என அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
ரோட்டை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விபத்துக்களை தடுக்க, ஒளிபிரதிபலிப்பான் மற்றும் ரோடு திரும்பும் பகுதியில், மஞ்சள் நிற பிரதிபலிக்கும் சோலார் சிக்னல்கள் அமைக்க வேண்டும்.விபத்து அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது. இங்கு விபத்து இல்லாத பகுதியாக மாற்ற அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 'பஸ்பே' அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அதிகாரிகள் மனது வைக்க வேண்டும், என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
13-May-2025