சகோதயா தடகளப் போட்டிகள் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி சாம்பியன்
மேட்டுப்பாளையம்: -: கோவையில் நடந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான சகோதயா தடகளப் போட்டியில், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவர்கள், ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். எட்டிமடையில் தனியார் பல்கலையில், தமிழ்நாடு மேற்கு மண்டலத்தில், 46வது கோவை சகோதயா பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தன. 119 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இருந்து, 3600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவர்கள், 135 வெற்றி புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இப்பள்ளி தொடர்ந்து 15 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இப்பள்ளியை சேர்ந்த, 8 மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். மாணவிகளுக்கான போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றது. பாலக்காடு மாவட்ட போலீஸ் கமிஷனர் அஜித்குமார், வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கினார். சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களை, பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை, செயலர் மோகன்தாஸ் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.