ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை
சூலுார்: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய கோரி, 100 கடைகள் முன், 100 நாள் போராட்டம் நடத்த உள்ளதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய கோரி, 100 ரேஷன் கடைகள் முன், 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கூறியதாவது:ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்பனை செய்ய வேண்டும், என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாமாயில் விற்பதால் வெளிநாடுகளுக்கு தான் பலன் கிடைக்கிறது. தேங்காய் எண்ணெய் விற்பனை செய்தால் உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்., 1 ம்தேதி முதல், 100 ரேஷன் கடைகள் முன், 100 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம். அக்., 1 ம்தேதி சூலுார் ஒன்றியம் அருகம்பாளையம் ரேஷன் கடை முன் போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.