தரமில்லாத இளநீர் ரக தென்னங்கன்று விற்பனை; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கண்ணீர்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். விவசாயிகள் பேசியதாவது: கேரள மாநிலத்தில், நெல் குவிண்டாலுக்கு, 3,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் குவிண்டாலுக்கு, 2,400 ரூபாயாக வழங்குவதை, 2,900 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நீர் மாசுபடுவதால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என தெரிவிக்க வேண்டும். காரப்பட்டி ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், இவ்வழியாக நரிக்கல்பதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைத்து பஸ் இயக்க வேண்டும். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தேங்காய்க்கு விதிக்கப்படும் ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.பொள்ளாச்சி தென்னை விவசாயிகளுக்கான கூட்டமைப்பு துவங்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான, கூட்டங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் வேர் வாடல் நோயினால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி அகற்றுகிறோம். எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என, கணக்கெடுப்பு நடத்தப்படாமல் உள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். நோய் பாதித்து வெட்டப்பட்ட மரங்களை அகற்றும் போது, அதற்கு மாற்றாக இளநீர் ரக தென்னங்கன்றுகளை வளர்க்க விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். இதை பயன்படுத்தி, சிலர் தரமில்லாத இளநீர் ரக தென்னங்கன்றுகளை விற்பனை செய்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து, தென்னங்கன்று தரமாக விற்பனை உறுதி செய்ய வேண்டும். தரமில்லாமல் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் திருட்டை தடுக்கணும்! பி.ஏ.பி., பாசனத்தில் தண்ணீர் திருட்டை தடுக்க குழு அமைத்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பாலாறு அருகே இருபுறமும் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளதால், கழிவுநீர் அதிகளவு ஆற்றில் கலந்து நீர் மாசுபடுகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைகளை பின்பற்ற நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் பேசினர். விவசாயிகள் ஒவ்வொரு பிரச்னையாக பேசிய போது, அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து பிரச்னைக்கு தீர்வு காணவும், பதிலளிக்கவும் சப் - கலெக்டர் அறிவுறுத்தினார்.