மணற்கேணி செயலி பள்ளிகளில் தீவிரம்
பெ.நா.பாளையம்; பள்ளிகளில், 'மணற்கேணி செயலி' செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கல்வி தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. கம்ப்யூட்டர் சார்ந்த புதிய அறிவியல், தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இச்செயலியில் ஒன்று முதல், பிளஸ், 2 வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில், அனிமேஷன் காணொளிகளாக, மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போர்டில், பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின், பாடங்களை தேர்வு செய்து, கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இது தவிர, தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறையில் கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அந்தந்த பகுதி வட்டாரகல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்என, அரசு அறிவுரை வழங்கி உள்ளது.