துாய்மை பணியாளர் ஊதிய விவகாரம்; ஜூலை 2க்கு பேச்சு ஒத்திவைப்பு
கோவை; ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, கோவை மாநகராட்சியில் இருந்து உயரதிகாரிகள் பங்கேற்காததால், ஜூலை 2க்கு பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் குடிநீர் ஆப்ரேட்டர்கள், கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி, 770 ரூபாய் வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாக தரப்பில், 680 ரூபாய் மட்டுமே வழங்க முடியுமென கூறப்படுகிறது; கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முறையிட்டனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநகராட்சி தரப்பில் துணை கமிஷனர் குமரேசன் அல்லது உதவி கமிஷனர் (நிர்வாகம்) மோகனசுந்தரி ஆகியோர் பங்கேற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு பதிலாக, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் வீரன் பங்கேற்றார். 'பேச்சுவார்த்தைக்கு மாநகராட்சி துணை கமிஷனர் மட்டுமே வர வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.இதையடுத்து, ஜூலை 2க்கு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.