துாய்மை பணியாளர்களின் சம்பளப் பிரச்னை; தொழிலாளர் நலத்துறையில் 23ல் விசாரணை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கோவை; தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த விசாரணையை தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சம்பளப் பிரச்னை தொடர்பாக, 23ல் மறு விசாரணை நடக்கிறது.கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்கக்கோரி, கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். அதில், தினக்கூலியாக, 680 ரூபாய் வழங்க மாநகராட்சி உறுதியளித்தது.சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. கூட்டமைப்பை சேர்ந்த ஆறு தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. போராட்டத்தை தொடர்ந்ததோடு, கலெக்டர் அலுவலகம் முன் கூடினர். போலீசார் கைது செய்து வந்தனர்.தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், நேற்று நடந்த விசாரணைக்கு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் வந்தனர். அலுவலகத்தை முற்றுகையிட வந்ததாக தகவல் பரவியதால், பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். அலுவலக நுழைவாயில் மூடப்பட்டது. விசாரணைக்கு வந்திருப்பதாக தெரிவித்ததும், கைது செய்யவில்லை.தொழிலாளர் நலத்துறை கூடுதல் இணை ஆணையர் சாந்தி, உதவி ஆணையர் (சமரசம்) ராஜ்குமார், உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் ஆகியோர் தலைமையில் விசாரணை நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர் கந்தசாமி, தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் பங்கேற்றார். மாநகராட்சி கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர், வேறொரு கூட்டத்துக்குச் சென்றிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., தொகையை, நிறுவனத்தினர் பங்கையும் தொழிலாளியிடம் பிடித்தம் செய்வதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அவ்வாறு பிடித்தம் செய்யக் கூடாது; நிறுவனத்தினரே பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டுமென, தொழிலாளர் நலத்துறையினர் அறிவுறுத்தினர்.போராட்டம் நடத்திய தொழிலாளர்களை நிபந்தனையின்றி, பணிக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். சம்பளப் பிரச்னை தொடர்பான மறு விசாரணை, 23ம் தேதி நடைபெறும். அதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.