சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் சப்தாஹ யக்ஞம் நாளை துவக்கம்
கோவை; சித்தாபுதுார் அய்யப்பசுவாமி கோவிலில், நாளை முதல் சப்தாஹயக்ஞம் மற்றும் நவயாக யக்ஞங்கள் துவங்குகின்றன. இது குறித்து, அய்யப்ப சுவாமி கோவில் செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: ஒவ்வொரு ஆடிமாதத்திலும் சித்தாபுதுார் அய்யப்ப சுவாமி கோவிலில், சப்தாஹயக்ஞமும் நவயாக யக்ஞங்களும் நடத்துவது வழக்கம். அதன்படி நாளை முதல், வரும் ஆக., 16ம் தேதி ஆடிமாதம் நிறைவடையும் வரை, தொடர்ந்து இந்த யக்ஞங்கள் நடக்கும். இந்நாட்களில் அன்றாடம் காலை சிறப்பு அஷ்டதிரவிழ கணபதி ஹோமங்களும், மாலையில் ஸ்ரீ சக்ரபூஜையுடன் கூடிய பகவதி சேவையும், கோவில் தந்திரி பாலக்காட்டில்லத்து சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் நடக்கிறது. இது தவிர, ராஜஸ்ரீ சங்கமேசன் தம்புரான் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞமும், ஸ்ரீ பத்ராவின் ஸ்ரீமத் நாராயணீய சப்தாஹ யக்ஞமும் நடக்கிறது. ஆச்சார்யா சி.பி.நாயரின் ஸ்ரீமத் ராமாயண சப்தாஹயக்ஞமும், ஆலாப்பாட் ராமச்சந்திரனின் ஸ்ரீமத்தேவி பாகவதம் நவாஹ யக்ஞமும் நடக்கிறது. இதில் பங்கேற்று, அய்யப்ப சுவாமியின் அருளை பெறலாம்.இவ்வாறு, விஜயகுமார் கூறினார்.