சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி; கேள்விக்குறியானது பாதுகாப்பு
வால்பாறை; வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவருகிறது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சியின் போது கட்டப்பட்டதாகும். பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில், 900 மாணவர்கள் படிக்கின்றனர்.இப்பள்ளியில் தான், அனைத்து அரசு தேர்வுகளும் நடக்கின்றன. ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழாவும் இந்த பள்ளி வளாகத்தில் தான் நடக்கிறது. தேர்தல் நேரங்களில் ஓட்டுச்சாவடியாகவும் உள்ளது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இது தவிர, இரவு நேரத்தில் சிறுத்தையும் பள்ளிக்கு வந்து செல்கிறது. இதனால், மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், 'பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, மாணவியருக்கு கழிப்பிட வசதி இல்லை. பள்ளியை சுற்றிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர காவலரை நியமிக்க வேண்டும்,' என்றனர்.