அறிவியல் திறனறித் தேர்வு
கோவை: போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாக வினாக்கள் வழங்கித் தேர்வு நடத்தப்படுகிறது. அக். 4-ம் தேதி மாநிலம் முழுவதும் நடந்த கணிதத் திறனறித் தேர்வை 60 ஆயிரம் பேர் எழுதினர். நேற்று நடந்த அறிவியல் திறனறித் தேர்வை, மாநிலம் முழுவதும் 62 ஆயிரம் பேர் எழுதினர். கோவையில், 20 மையங்களில் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசுடன் சான்றிதழும், தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என, செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.