பாரம்பரியமாய் நடக்கும் நாற்று நடவு திருவிழா
பேரூர் கோவிலில் பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது நாற்று நடவுத்திருவிழா. இவ்விழாவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களும் பக்தர்களும் ஆண்டுதோறும் விமரிசையாக விழாவாக கொண்டாடுகின்றனர்.ஆனி மாதத்தில் கிருத்திகையில் துவங்கி, பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சன வைபவமும் கோலாகலமாய் நடக்கிறது.சுந்தரமூர்த்தி நாயனார், பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளியாகவும் நாற்று நடச் சென்றனர்.தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரர்' வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்தி தேவரை எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க கோவிலுக்கு வந்த சுந்தரர், கோவிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார்.சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் நொய்யல் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழ்ந்தார்.நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்தார். அதனால் தான் கோவிலில் வீற்றிருக்கும் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கும். பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார்.