செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள காந்திநகர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.காந்தி நகரில் உள்ள பழமையான செல்வமுத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோவில், பாலமுருகன் கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, நவகிரக வேள்வி, காப்பு அணிவித்தல், நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர்.பின்னர், அவற்றை திருக்குடங்களில் எழுந்தருள செய்து, செல்வமுத்து மாரியம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள் கருவறையிலிருந்து யாக சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, முதல் கால வேள்வி, மலர் அர்ச்சனை, பேரொளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. திருமஞ்சனம் சாத்துதல், இரண்டாம் கால வேள்வி, விமான கலசம் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை திருப்பள்ளியெழுச்சி மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. நாடி சந்தானம், திருக்குடங்கள் கோவிலை சுற்றி வருதல் நிகழ்ச்சி நடந்தது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், வாராகி மணிகண்ட சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கியார் தேசிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.