காப்பீடு திட்டத்தில் சேவை குறைபாடு; இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை; மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேவை குறைபாடு செய்ததால், இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.கோவை, உப்பாரவீதியை சேர்ந்த சக்தி கணபதி என்பவர், ஸ்டார் ெஹல்த் அன்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 2007 முதல், 'ஸ்டார் ட்ரூ வேல்யூ 'திட்டத்தின் கீழ் தொடர்ந்து மருத்துவ காப்பீடு செய்து வந்துள்ளார்.மருத்துவ காப்பீடு காலம், 2023, டிசம்பருடன் முடிவடைந்ததை தொடர்ந்து, பாலிசியை புதுப்பிக்க இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். ஆனால், காப்பீட்டை புதுப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டது.மருத்துவ காப்பீடு புதுப்பிப்பு தேதி முடிவதற்கு முன்பே, அவரது அனுமதியின்றி, ஆரோக்யா சஞ்சீவ் திட்டத்திற்கு மருத்துவ காப்பீடை மாற்றியது தெரிய வந்தது.பாதிக்கப்பட்ட சக்தி கணபதி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'காப்பீடு திட்டம் மாற்றம் பற்றிய தகவல், உரிய காலத்தில் மனுதாரருக்கு தெரிவிக்காதது சேவை குறைபாடாகும். 'எனவே, மனுதாரரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.