கோவை சிறுமி கூட்டு பலாத்காரம் கல்லுாரி மாணவர்கள் 7 பேர் கைது சமூக வலைதள பழக்கத்தால் நேர்ந்த கொடூரம்
கோவை:கோவையில், 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஏழு கல்லுாரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுமி சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.சிறுமியின் தாத்தா, சில வாரங்களுக்கு முன் இறந்தார். இதனால், சிறுமி இரவு நேரங்களில் தன் பாட்டிக்கு துணையாக, அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்று உறங்குவது வழக்கம். கடந்த 16ம் தேதி இரவு, சிறுமி, அவரது பாட்டி வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வராததால், பாட்டி சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார். போலீசார் விசாரணை
பதறிப்போன சிறுமியின் தந்தை, மகளை காணவில்லை என, போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடினர். அப்போது, சிறுமி, அவரது பாட்டி வீட்டின் அருகில் இருந்துள்ளார். சிறுமியை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.இதில், சமூக வலைதளம் வாயிலாக பழக்கமான இரண்டு கல்லுாரி மாணவர்கள், சிறுமியை கோவைப்புதுாரில் உள்ள தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றதும், அங்கு, இரண்டு மாணவர்கள், அவர்களுடன் அறையில் தங்கியிருந்த மேலும் ஐந்து மாணவர்கள் என, ஏழு பேர் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.அதன்பின், இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, பாட்டி வீட்டின் அருகில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர். சிறுமியிடம் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், ஏழு மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைப்பு
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள், கோவைப்புதுார் தனியார் கல்லுாரிகளில் படிக்கும் ஜெபின், 20, ரக் ஷித், 19, அபினேஸ்வரன், 20, தீபக், 20, யாதவராஜ், 19, முத்து நாகராஜ், 19, நிதிஷ், 20, என்பது தெரியவந்தது. போலீசார் ஏழு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?கோவை சிறுமி, ஏழு பேரால் கூட்டு வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமியருக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக, தி.மு.க., ஆட்சியில், தமிழகம் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது. 'குற்றம் நடந்தபின் கைது செய்து விட்டோம்' என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை சொல்ல மறுக்கிறார். தனக்குத்தானே, 'அப்பா' என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?- - பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க., துரும்பையும் அசைக்கவில்லைபெருகி இருக்கும் போதைப்பொருள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத் தான் சிறுமியர் மீதான இதுபோன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன. ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் சிறுமியர், மாணவியர், பெண் காவலர்கள், பெண் அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, தி.மு.க., அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.- அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,