சிறுவாணி பராமரிப்பு; மதிப்பீட்டுக்கு காத்திருப்பு; தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு
கோவை; சிறுவாணியில் நீர் கசிவை சரி செய்வதற்கான மதிப்பீட்டை, இதுவரை வழங்காமல் கேரள அரசு இழுத்தடிக்கும் நிலையில், தமிழக அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்தி, மழைக்கு முன் பலப்படுத்துவது அவசியம். கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளதால், அம்மாநில நீர் பாசனைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. அணையில் நீர்க்கசிவு காரணமாக, 44.61 அடி வரை மட்டுமே நீரை தேக்க, கேரள அரசு அனுமதித்துள்ளது. கசிவு சரி செய்வது தொடர்பாக, புனே தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவும், கேரள அதிகாரிகளும் இந்தாண்டு ஜன., மாதம் ஆய்வு செய்தனர். ஆய்வு கட்டணமாக, ரூ.17 லட்சம் ரூபாயையும் கோவை மாநகராட்சி செலுத்தி விட்டது. கடந்த ஜூன் மாதம் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அணைப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, கசிவு சரி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையுடன், பராமரிப்பு மதிப்பீடு வழங்குமாறும், கேரள அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்ட அறிக்கையை இதுவரை கேரள அதிகாரிகள் வழங்கவில்லை. ஓராண்டுக்கும் மேலாக தினமும், 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. கசிவை சரி செய்தால் கோவை மக்களுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்கும். மழை சமயத்தில் அணை நிரம்பாமல், மதகு வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மதகை மூடுமாறு கோவை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினாலும், கேரள அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பராமரிப்பை காரணம் காட்டி, முழு கொள்ளளவு தண்ணீரை தேக்க கேரள அரசு மறுப்பதுடன், கசிவை சரி செய்வதற்கான மதிப்பீட்டை வழங்காமலும் இழுத்தடிப்பது, கோவை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடையும் முன்பு கேரள அரசுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அணையை பராமரித்து முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''கேரள அதிகாரிகளிடம் இதுகுறித்து தொடர்ந்து பேசிவருகிறோம்,'' என்றார்.