மேலும் செய்திகள்
மாணவர் தோளில் மீண்டும் புத்தகப்பை
04-Oct-2026
கோவை: பள்ளிகளில் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, இரண்டாம் பருவ வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. தொடக்க, நடுநிலை வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ‘திறன் பிளஸ்’ எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும். எழுத்துகளை அடையாளம் காண்பது, வாசிப்பது, ஒரு வாக்கியத்தை தடுமாற்றமின்றி வாசிக்க திணறுவோர் மற்றும் எண்களை அடையாளம் காண்பது, வாய்ப்பாடு, எளிய கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலில் இடர்பாடு உள்ளவர்கள் அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரடியாக கேள்விகள் இடம்பெறாது. புரிந்து விடையளிக்கும் கேள்விகள் இருப்பதால், மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடவும், மேம்படுத்தவும் முடியும். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், திறன் பிளஸ் பயிற்சி தேவைப்படுவோருக்கு சிறப்பு வகுப்புகள் இனி பள்ளிகளில் நடத்தப்படும். ஏற்கனவே முதல் பருவ தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இத்துடன், திறன் பிளஸ் தேர்வையும் ஒப்பிட்டு, படிப்பில் பின்தங்கியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். ‘திறன் பிளஸ் திட்ட தேர்வு வரும் 21–23 ம் தேதி வரை நடக்கிறது. 2–5 ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்’ என்றனர் திட்ட ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள்.
04-Oct-2026