உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பனியால்  குறைந்தது வரத்து : பூக்கள் விலை கடும் உயர்வு 

பனியால்  குறைந்தது வரத்து : பூக்கள் விலை கடும் உயர்வு 

கோவை; கடும் பனி காரணமாக, கோவைக்கு பூக்கள் வரத்து குறைந்து, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுவாக, கோவைக்கு சத்தியமங்கலம், காரமடை, புளியம்பட்டி, சேலம், போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும், 10 டன் பூக்கள் வரத்து இருக்கும். நேற்றைய நிலவரப்படி, 1.5 முதல் 2 டன் வரத்து மட்டுமே உள்ளது. பனி காரணமாக, பூக்கள் பறிக்கும் முன்னரே அழுகி விடுவதால் வரத்து குறைந்துள்ளதாக, பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பூமார்க்கெட்டில் நேற்று முன்தினம், பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று மார்கழி முதல் தினம் என்பதால், பூக்கள் தேவை அதிகரித்து விலை உச்சத்தை தொட்டது. அதன்படி, சாதாரணமாக கிலோ 600 முதல் 800 ரூபாய்க்கு விற்கப்படும் மல்லிகை, 1600 முதல் 2000 ரூபாய் வரை விற்பனையானது. 400 -500 ரூபாய் இருந்த முல்லை, 1600 முதல் 1800 ரூபாய் வரையும், 100-120 ரூபாய் இருந்த செவ்வந்தி 200-240 ரூபாய்க்கும், 150 முதல் 200க்கு விற்பனையான அரளி 500-600 ரூபாய்க்கும், 80-100 ரூபாயாக இருந்த சம்பங்கி 120-160 ரூபாய்க்கும், 5-10 ரூபாய்க்கு விற்பனையான ஒரு தாமரை, 25 ரூபாய்க்கும் விற்பனையானது. இதுகுறித்து, பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க பொருளாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், '' கோவைக்கு வழக்கமாக, தினமும் 10 டன் பூக்கள் வரத்து இருக்கும். தற்போது, பனி காரணமாக வரத்து குறைந்து விட்டது. இதனால, பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு இருக்கும் வரை, விலையும் சற்று அதிகரித்தே இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !