21 ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை நிறைவு
அன்னுார்; நாரணாபுரம் ஊராட்சி, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 150 நாட்கள் வேலை தர தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், கடந்த 2023 ஏப். 1 முதல், 2024 மார்ச் 31ம் தேதி வரை நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை நாரணாபுரம் ஊராட்சியில் நடந்தது.இதில் பணிகள் அளவீடு செய்யப்பட்டன. வேலை அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஈஸ்வரி தலைமை வகித்தார்.இதில் வட்டார வள அலுவலர் கனகராஜ் தணிக்கை அறிக்கை சமர்ப்பித்து பேசுகையில், ''இந்த ஊராட்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வரப்பு அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட 19 பணிகள் நடைபெற்றுள்ளன,'' என்றார்.தொழிலாளர்கள் பேசுகையில், '100 நாள் மட்டும் வேலை தருகின்றனர். மற்ற நாட்களில் வேலையில்லாமல் இருக்கிறோம். 150 நாளாக உயர்த்தி வேலை தர வேண்டும். மூன்று மாதமாக சம்பள நிலுவையை வழங்க வேண்டும்,' என்றனர்.துணை வட்டார வளர்ச்சி பீர்முகமது பேசுகையில், இந்த கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிப்பதாக கூறினார்.ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் மற்றும் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இத்துடன் அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் சமூக தணிக்கை முடிவடைந்து விட்டது.