கனமழையால் நிரம்பியது சோலையாறு அணை; பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
வால்பாறை; வால்பாறையில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால், சோலையாறு அணை முழுக்கொள்ளளவும் நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கியது. கடந்த, 20 நாட்களாக இடைவிடாமல் பெய்த கனமழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நேற்று மதியம், 12:00 மணிக்கு முழுக்கொள்ளவை எட்டியது. அணைக்கு வினாடிக்கு, 5,384 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணை நிரம்பியதையடுத்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 451 கனஅடி தண்ணீர் வீதம் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இந்த ஆண்டில் முதன் முறையாகவும், முன்கூட்டியேயும் சோலையாறு அணை நிரம்பியதையடுத்து, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பள்ளிகள் விடுமுறை
நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் வால்பாறை - சோலையாறு அணை செல்லும் ரோட்டில் பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காற்றுடன் கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.பல எஸ்டேட்களில், தொழிலாளர்களுக்கு விடுப்பு விடப்பட்டு, தேயிலை பறிப்பு பணி கைவிடப்பட்டது. மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு: சோலையாறு - 175, பரம்பிக்குளம் - 95, ஆழியாறு - 8, வால்பாறை - 94, மேல்நீராறு - 119, கீழ்நீராறு - 116, காடம்பாறை - 3, சர்க்கார்பதி - 38, வேட்டைக்காரன்புதுார் - 37, மணக்கடவு - 55, துாணக்கடவு - 68, பெருவாரிப்பள்ளம் - 75, நவமலை - 6, பொள்ளாச்சி - 44 என்ற அளவில் மழை பெய்தது.