குழந்தைக்கு ஏற்படும் எலும்பு மஜ்ஜை பிரச்னைக்கு கே.எம்.சி.எச்.ல் தீர்வு
அவிநாசி ரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை பிரச்னைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கும் முகாம் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து, கே.எம்.சி.எச். டாக்டர் ருமேஷ் சந்தர் கூறியதாவது: தலசீமியா மற்றும் சிக்கில் செல் அனீமியா நோய் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றனர். இந்நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைபாடுகள், ஹண்டர் சின்ட்ரோம், ஹர்லர் சின்ட்ரோம், ஆஸ்டியோபெட்ரோசிஸ் உள்ள குழந்தைகளுக்கும் எலும்பு மஞ்சை மாற்றுதலே நிரந்தர தீர்வை தரும். இரத்த சோகை, கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம் போன்ற அறிகுறிகள் தலசீமியா நோய்க்கான அறிகுறிகளாகும். இரத்த சோகை, எலும்புகளில் வலி, நுரையீரல் பாதிப்பு, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் சிக்கில் செல் அனீமியா நோய்க்கான அறிகுறிகளாகும். தீராத காய்ச்சல், எலும்புகளில் வலி, கழுத்து, அக்குள், தாடையிடுக்கு பகுதிகளில் நெறிக்கட்டி வீக்கம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், ஈறுகள் மற்றும் தோலில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவை குழந்தைப்பருவத்தில் ஏற்படும் ரத்த புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும். தீவிரமான ரத்தப் புற்றுநோயை எலும்பு மஜ்ஜை மாற்றுதல் வாயிலாகவும், மற்ற வகை புற்றுநோய்களை கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வாயிலாகவும் குணப்படுத்தலாம். குழந்தைப்பருவ புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. கே.எம்.சி.எச்.ல் வரும் 28ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் தினமும் காலை 9 முதல் பிற் பகல் 3 மணி வரை நடக்கும் முகாமில், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 74188 87411. இவ்வாறு, அவர் கூறினார்.