பழங்குடியின மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வால்பாறை : வால்பாறை அடுத்துள்ளது காடம்பாறை கீழ்பூனாஞ்சி, வெள்ளிமுடி செட்டில்மென்ட். தொலை துாரத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, வால்பாறை அரசு ஆரம்ப சுகதார நிலைய மருத்துவக்குழுவினர் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர்கள் ஜெனீபர்டார்த்தி, மாசானம் ஆகியோர் தலைமையில், 'ஆஷா' பணியாளர்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், ரத்த அழுத்தம், காய்ச்சல், சர்க்கரைநோய் பரிசோனை செய்து, மருந்து வழங்கினர்.கிராம சுகாதாரத்துறை செவிலியர்கள் பேசுகையில், 'பழங்குடியின மக்கள் செட்டில்மென்ட் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள இயற்கையான உணவுகளையே அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, சத்துக்கள் நிறைந்த பழ வகைகள், பால், முட்டை, கீரை வகைளை அதிக அளவில் உட்கொண்டால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படாது.அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னை தொடர்ந்து இருந்தால், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்,' என்றனர்.