வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி: அலறும் ஊராட்சி செயலாளர்கள்
பொள்ளாச்சி: 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்,' என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்த வருவாய்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிவுற்று, தற்போது தனி அலுவலரால் ஊராட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஊராட்சி தலைவர்களின் பதவி காலத்தில் உள்ளதை காட்டிலும், அதிக பணிச்சுமையுடன் ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வினியோகம், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற பணிகளுடன், ஊராட்சியின் அத்தியாவசிய கடமைகளான வரி வசூல் செய்தல், கூடுதல் தலைமை செயலரின் சிறப்பு கவனம் பெறும் நர்சரி பணிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழல்உள்ளது. இதனால், கடும் சிரமத்துக்கு இடையே மன உளைச்சலுடன் ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் ஊராட்சி செயலாளர்கள் ஈடுபடுத்தினால், கூடுதல் பணிச்சுமை ஏற்படும். ஊராட்சி நிர்வாகத்திலும் கடும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.