உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு; அதிகாலையில் பாசுரங்கள் பாடி கூட்டு பஜனை

கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு; அதிகாலையில் பாசுரங்கள் பாடி கூட்டு பஜனை

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில், வண்ண கோலமிட்டு, கோவில்களில் பஜனைகளுடனும், கோலாகலமாய் துவங்கியது மார்கழி மாத வழிபாடு.பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது தனுர் எனப்படும் மார்கழி மாதம். இம்மாதத்தில் அதிகாலையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்த வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.சூரிய உதயத்துக்கு முன்னதாக, பிரம்ம முகூர்த்த காலத்தில் திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடி, கூட்டு பஜனை நடைபெறும்.மார்கழி மாதம் துவங்கியுள்ளதையொட்டி, உடுமலை பெரியகடை வீதி நவநீதகிருஷ்ணசாமி கோவிலில் நேற்று அதிகாலை பஜனையுடன் மார்கழி மாத சிறப்பு பூஜை துவங்கியது. காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசா பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.* பிரசன்ன விநாயகர் கோவிலில், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷக அலங்காரம் நடந்தது. சவுரிராஜ பெருமாள் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்கார பூஜையுடன் தீபாராதனை நடந்தது.* குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், சிறப்பு வழிபாடு நேற்று துவங்கியது. மார்கழி நிறைவு பெறும் வரை, அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு பஜனை, காலை, 6:00 மணிக்கு, ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடக்கிறது. ரங்கமன்னார் சுவாமிகளுடன் ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பூமிநீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. கோவில்களில் திருப்பாவை பாசுரம் பஜனை சேவை நடந்தது.* குட்டை திடல், சித்திபுத்தி விநாயகர் கோவிலில், பக்தர்கள், சுவாமிக்கு தீர்த்தம் ஊற்றி, வழிபட்டனர். சத்திரம்வீதி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், வ.உ.சி.,வீதி வினைதீர்க்கும் விநாயகர் கோவிலில்களில் சிறப்பு பூஜை நடந்தது.* சோமவாரபட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் பங்கேற்று ஆல்கொண்டமாலனை தரிசனம் செய்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பஜனை பாடல்களை பாடியபடி குழுவினர் செல்கின்றனர். ஜோதிநகர் பஜனை குழுவினர், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியபடி வீதிகளில் சென்றனர்.மார்கழி மாதம் முழுவதும் காலை, 6:15 மணிக்கு ஜோதிநகர் விநாயகர் கோவிலில் துவங்கிய பஜனை பாடல்களை பாடி வீதி வலம் வருவது தொடர்கிறது. இறுதியில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவு பெறுகிறது.அறிவியலும், ஆன்மிகமும் கலந்துள்ள இந்த மார்கழி வழிபாடுடன் கூடிய பஜனை பாடிச் செல்வதால், புத்துணர்வு கிடைக்கிறது என பஜனை குழுவினர்கள் தெரிவித்தனர்.

சிறப்பு பூஜை

* பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மார்கழி திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. வரும் ஜன., 13ம் தேதி வரை காலை, 5:00 மணி முதல், 6:00 மணி வரை திருப்பாவை பாராயணம் நடக்கிறது.* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், சுவாமிக்கு ஒன்பது வகையான அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.* பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் காலை, 4:00 மணிக்கு அபிேஷகம், அலங்காரம், காலை, 5:00 மணிக்கு நடை திறப்பு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வால்பாறை

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், மார்கழி மாதம் முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அபிேஷகம், சிறப்புஅலங்கார வழிபாடு நடந்தது.* வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5:30 மணிக்கு அபிேஷக பூஜையும், 6:30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.* கருமலை பாலாஜி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹமமும், காலை, 5:30 மணிக்கு அபிேஷக பூஜையும் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பாலாஜி தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.* வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத முதல் நாளான நேற்று, காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. அண்ணா நகர் ராமர் கோவிலில் மார்கழி மாத சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை