உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்பந்து வீராங்கனைகள் அலைச்சலுக்கு தீர்வு மாநில அளவிலான தேர்வு ஒத்திவைத்து உத்தரவு

கால்பந்து வீராங்கனைகள் அலைச்சலுக்கு தீர்வு மாநில அளவிலான தேர்வு ஒத்திவைத்து உத்தரவு

கோவை: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில் மாணவ, மாணவியருக்கு மண்டல, மாநில அளவிலான தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். மாணவர்களின் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பள்ளி கல்வித்துறையும் இணைந்து இப்போட்டியை நடத்தி வருகிறது. அவ்வகையில், 2025-26ம் கல்வியாண்டுக்கான மண்டல போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை கொண்ட மண்டல அளவிலான போட்டிகள், பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது. 14, 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு கால்பந்து, கோ-கோ, கபடி தேர்வு போட்டி, 27, 28ல் ஈரோட்டில் நடக்கிறது. கால்பந்து போட்டியை பொறுத்தவரை மாணவியருக்கு, 27ம் தேதி நடக்கிறது. இப்போட்டி முடிந்த மறுநாள் (28ம் தேதி) மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா பள்ளியில் காலை 8 மணிக்கு மாநில அளவிலான தேர்வு போட்டி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மண்டல அளவிலான போட்டிகளை முடித்து விட்டு, மறுநாள் மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்பது அலைச்சலை ஏற்படுத்துவதுடன், மாணவியரிடம் உடல் சோர்வையும் ஏற்படுத்தும் என்பதால், தேர்வு தேதியில் மாற்றம் செய்ய உடற்கல்வி ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை உடற்கல்வி ஆய்வாளர், அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 'மயிலாடுதுறையில், 28ம் தேதி நடக்கவிருந்த மாநில அளவிலான தேர்வு போட்டி, நிர்வாக காரணங்களால் அக்., 5ல் நடைபெறும். தகுதி பெற்ற மாணவியர் உரிய நேரத்தில் பங்கேற்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !